Last Updated:
371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி வாய்ப்பு இரு அணிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 20 ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி 465 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 6 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடியது.
இந்திய அணியில் தொடக்க வீரர் கே. எல். ராகுல் 137 ரன்களும் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 118 ரன்களும் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 96 ஓவர்கள் வரை விளையாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 364 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் மொத்தம் இங்கிலாந்து அணியை விடவும் இந்தியா 370 ரன்கள் முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர்.
நேற்றைய 4-ஆம் நாள் ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி நிதானமாக ரன்களை சேர்த்து வருகிறது.
மதிய உணவு இடைவேளை வரையில் இங்கிலாந்து அணி 30 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் எடுத்துள்ளது. ஜாக் க்ராவ்லி 42 ரன்களும், பென் டக்கட் 64 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
இன்றைக்கு அதிகபட்சம் 60 ஓவர்கள் வரை இன்னும் வீசப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் இந்திய அணி சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்திய அணி வெற்றி பெறலாம். அதேநேரம் இங்கிலாந்துக்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதனால் லீட்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்கிறது.
June 24, 2025 6:13 PM IST


