Last Updated:
ஜார்க்கண்ட்டில் தலசீமியாவால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளுக்கு எஃச்.ஐ.வி. பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
ஜார்க்கண்டின் சைபாசா நகரில் மாசுபட்ட ரத்தம் ஏற்றப்பட்டதால், ஐந்து குழந்தைகளுக்கு எஃச்.ஐ.வி. தொற்று உறுதியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் சைபாசா நகரில் தலசீமியா மரபணு நோயால் பாதிக்கப்பட்ட ஏழு வயது குழந்தைக்கு எஃச்.ஐ.வி. தொற்று உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதுபற்றிய விசாரணையின்போது, ரத்த வங்கியில் தங்கள் குழந்தைக்கு எஃச்.ஐ.வி. தொற்று பாதிக்கப்பட்டவரின் ரத்தம் மாற்றப்பட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியதை அடுத்து, இதுகுறித்து விசாரிக்க மாநில அரசு குழு அமைத்து உத்தரவிட்டது. அதன்படி, ஜார்க்கண்ட் சுகாதார சேவைகள் இயக்குநர் தினேஷ் குமார் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் ரத்த வங்கியையும், குழந்தைகள் சிகிச்சைப் பிரிவையும் ஆய்வு மேற்கொண்டனர்.

விசாரணையில் தலசீமியாவால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மாசுப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்டது தெரியவந்துள்ளதாகக் கூறிய மருத்துவர் தினேஷ் குமார், ரத்த வங்கியில் சில குறைகளைக் கண்டறிந்ததாகவும், அவற்றை களைய மருத்துவமனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனிடையே, தலசீமியாவால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு குழந்தைகளுக்கு எஃச்.ஐ.வி. பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், எஃச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.
October 26, 2025 3:14 PM IST


