2023-ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட இங்கிலாந்து பயணம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நடத்திய விசாரணைகள் சம்பந்தமாக, வொல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் அளித்த பதில் குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்திற்குள் ஒரு சர்ச்சை எழுந்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மைத்ரி விக்ரமசிங்கவுக்கு கௌரவப் பேராசிரியர் பதவி வழங்கிய வொல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, ரூ. 16.6 மில்லியனுக்கும் அதிகமான அரசாங்க நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு மீதான விசாரணையை முடிப்பதில் இந்த சர்ச்சை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது என்று அந்த அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
வொல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் பதில்
பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்திருப்பதாக வொல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருந்ததாக கடந்த வாரம் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒரு தரப்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிலைப்பாட்டிற்கு ஒப்புதல் அளித்ததாகவும், மற்றொரு தரப்பு அது ஏற்கத்தக்கது எனத் தனது கருத்தைத் தெரிவித்ததாகவும் இன்று அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வழக்கைக் கையாளும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸிடம், பல்கலைக்கழகத்தின் பதிலை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம் அந்தப் பதிலை மேலும் ஆராய்ந்து, எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவெடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைமை, விசாரணைகளை நிறைவு செய்வதையும், நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்வதையும் அல்லது திரும்பப் பெறுவதையும் தாமதப்படுத்தியுள்ளது.
சமன் ஏகநாயக்கவின் கையெழுத்துப் பிரதிகள்
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்கவின் கையெழுத்துப் பிரதிகள் மீதான அரசாங்கப் பகுப்பாய்வாளரின் அறிக்கைகளை சட்டமா அதிபர் இன்னும் பெறவில்லை.
தொடர்புடைய அறிக்கைகளை உடனடியாகப் பெற்று, மைத்திரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பீரிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வழக்கு ஏப்ரல் 28 அன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் முன் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

