ரஜினிகாந்த், கமல்ஹாசனால் கூட செய்ய முடியாததை முதலமைச்சர் விஜய் சாதித்து காட்டியது எப்படி?
தமிழ் சினிவாவின் இரு பெரும் துருவங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரால் கூட சாதிக்க முடியாத ஒன்றை சாதித்து காட்டி இருக்கிறார் முதலமைச்சர் விஜய். விஜயின் பிறந்தநாளில் அரசியலில் அவர் வெற்றி பெற்றது எப்படி ஏன் இதனை ரஜினி போன்றவர்களால் சாதிக்க முடியாமல் போனது என தெரிந்து கொள்ளலாம்.
திரையுலகில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவதும் ஆட்சி செய்யும் அளவுக்கு உயர்வதும் தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒன்று. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரே இதற்கு சிறந்த உதாரணம். திரையில் மட்டுமல்ல அரசியலிலும் பெரும் உச்சத்திற்கு சென்றவர்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு பிறகு இவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் முதலமைச்சர் ஆவார் என அனைவரும் எதிர்பார்த்த ஒரு நடிகர் ரஜினிகாந்த். செய்தியாளர் சந்திப்பு, மேடை பேச்சு என எங்கெல்லாம் ரஜினிகாந்த் பேசுகிறாரோ அங்கெல்லாம் நீங்கள் எப்போது அரசியலுக்கு வருவீர்கள் என்ற கேள்வி முன் வைக்கப்படும். அதே போல தான் கமல்ஹாசனும் , திடீரென அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார்.

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சி தொடங்கினார். ஆனால் அவரது கட்சியால் நேரடி தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை மக்களின் வாக்குகளையும் பெற முடியவில்லை. கமலே கூட தேர்தலில் தோல்வி அடைந்து தான் போனார். இந்த சூழலில் தான் ரஜினி இப்போது வந்தால் கூட சாதிப்பார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், பலமுறை யோசித்து, இறுதியில் உடல்நிலை மற்றும் சூழலைக் கருத்தில் கொண்டு அந்த முயற்சியைக் கைவிட்டார் ரஜினிகாந்த்.
இப்படி இரு பெரும் துருவங்களான ரஜினிகாந்திற்கும் கமல்ஹாசனுக்கும் நிறைவேறாமல் போன அரசியல் கனவை நிறைவேற்றி முதலமைச்சர் அரியணையிலேயே அமர்ந்திருக்கிறார் விஜய். இந்த இருவரின் பாதையிலிருந்து வேறுபட்டு, விஜய் தனது அரசியல் பிரவேசத்தை மிகக் கவனமாகத் திட்டமிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

ரஜினி, கமல் இருவரும் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகே அரசியலை தீவிரமாக அணுகினர். ஆனால், விஜய் தனது கேரியரின் உச்சத்தில் இருக்கும்போதே, நடிப்புக்கும் அரசியலுக்கும் ஒரு பாலத்தை உருவாக்கி, தனது ரசிகர் மன்றத்தை வலுவான அமைப்பாக அதாவதுவிஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார்.
இப்போ வரேன், அப்போ வரேன் என கூறாமல் தடாலடியாக களமிறங்கினார். 2024இல் அரசியல் கட்சி தொடங்கி அதற்கு தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் சூட்டினார். திரைப்படங்களில் நடிப்பதை விடுத்து முழு நேர அரசியல்வாதியாக இருப்பதாக அறிவித்து சர்ப்பிரைஸ் தந்தார். அத்துடன் நின்று விடாமல் கட்சி பெயர், கட்சியின் கொள்கைகள் என ஒரு தெளிவான அரசியல் அடையாளத்தை உருவாக்கினார். இது தான் ரஜினி, கமலிடம் இருந்து விஜயை வேறுபடுத்தி காட்டியது.
தனது ரசிகர் மன்றத்தின் மூலம் முதலில் உள்ளாட்சி தேர்தலில் களம் கண்டு மக்களிடம் ஆதரவு இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டார் விஜய். இதன் மூலம் அடித்தட்டு மக்களிடம் நேரடித் தொடர்பை ஏற்படுத்தினார். இது தேர்தல் நேரத்தில் அவருக்குக் கை கொடுக்கும் பெரிய பலமாக மாறியுள்ளது.
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அரசியலில் இருக்கும்போதும் சினிமாவைத் தொடர்ந்தனர். ஆனால், விஜய் அரசியலுக்காகத் தனது திரையுலக வாழ்க்கையை முழுமையாகக் கைவிடுவதாக அறிவித்தது, மக்களிடம் தன்னை ஒரு முழு நேர அரசியல்வாதியாக காட்டி நம்பிக்கையை ஏற்படுத்தினார்.
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் முழு அரசியல்வாதியாகவும் வராமல் முழு நடிகனாகவும் இருக்க முடியாத தவித்த போது விஜய் தனது துணிச்சலான முடிவு மற்றும் திட்டமிடல் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்து விட்டார். நடிப்பிற்கு முழுக்கு போட்டு முழு நேரமாக களமிறங்கி தேர்தல் பரப்புரை செய்தது , தன்னை கட்சியின் அடையாளமாக நிலை நிறுத்தியது, விமர்சனங்களை கண்டு துவண்டு போகாமல் தொடர்ந்து அரசியலில் நீடித்தது ஆகியவை தான் விஜய் முதலமைச்சர் பதவிக்கு செல்வதற்கும் அரசியலில் வெல்வதற்கும் மற்றொரு காரணம். விஜய்யின் இந்த அரசியல் திரைக்கதை சினிமாவில் இருந்து அரசியலுக்கு வர வேண்டும் என எண்ணுபவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்திருக்கிறது.
