மகாராஷ்டிர மாநிலம் மும்பை உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே கலப்பட பால் விற்பனை ஜோராக நடைபெறுவதாக புகார்கள் வந்துள்ளன. இதில், சில இடங்களைக் கண்டுபிடித்து போலீசாரும், உணவு பாதுகாப்புத் துறையினரும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இருந்தபோதும் கலப்பட பால் தயாரிக்கும் கும்பல், புற்றீசல் போன்று ஆங்காங்கே கண்ணுக்குத் தெரியாமல் வந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில், மும்பையின் அந்தேரி பகுதியில் ஒரு வீட்டில் குடிசைத் தொழில் போன்று கலப்பட பால் தயாரிப்பு பணி ஜோராக நடந்து வந்துள்ளது. இந்த தகவல் பொதுமக்களில் சிலரின் காதுக்கு சென்றுள்ளது. மெல்ல ஊர் முழுவதும் பரவிய செய்தி, போலீசாரின் காதுக்கும் சென்றுள்ளது.
பின்னர், தகவல் அறிந்த சில காவலர்கள் கலப்பட பால் தயாரிக்கும் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்துள்ளனர். அவர்களை கண்டதும் அங்கிருந்த ஆணும், பெண்ணும் திருடனுக்கு தேள் கொட்டியது போன்று கையறு நிலையில் நின்றுள்ளனர். கையும், களவுமாக பிடித்த போலீசார் இது என்ன என்று கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு, அந்த நபர் தான் செய்யும் தொழிலின் ஆபத்தை உணராமல் சர்வ சாதாரணமாக ”கலப்பட பால்தான்” என்று தெனாவட்டாக பதில் கூறியுள்ளார். பின்னர், கலப்பட பாலை எப்படி பாக்கெட் செய்து விற்கிறாய் என்று கேட்டதற்கு, பொறுமையாக அமர்ந்து அதற்கும் விளக்கம் அளித்துள்ளார்.
ஒரு லிட்டர் அளவிற்கு பால் போன்ற திரவத்தை உருவாக்கி, அதில் தண்ணீரை கலந்து இரண்டு மடங்கு அளவிற்கு தயார் செய்து கல்லா கட்டியுள்ளனர். இந்த கலப்படப் பாலை உட்கொண்டால் சிறுவர்கள், பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு உடல்நலம் பாதிக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ரசாயனம் கலந்த பாலை தொடர்ந்து உட்கொண்டால் சிறுநீரகம், கல்லீரல், இரைப்பை பாதிக்கப்படுவதுடன், உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இருந்தபோதும் கலப்பட பால் தயாரிப்பு தொடர்பான கைது நடவடிக்கை குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகாத நிலையில், ஒட்டுமொத்த கும்பலையும் கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் ரசாயனம் மூலம் செயற்கை முறையில் பால் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Dec 27, 2025 10:22 PM IST

