Last Updated:
அகமதாபாத்தில், ரகசிய அறைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 792 மது பாட்டில்கள் மற்றும் பீர் கேன்களை போலீசார் மீட்டனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், வீட்டுக்குள் ரகசிய அறை அமைத்து பண்டல் பண்டலாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மதுபானங்களை போலீசார் மொத்தமாக தூக்கியுள்ளனர்.
குஜராத் மாநிலம் அஹமதாபாத் அருகே பரேஜா என்ற கிராமத்தில் ஒரு வீட்டிற்கு குடிமகன்கள் அடிக்கடி விசிட் அடித்து வருவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி போலீசார் ஒரு குழு அமைத்து அந்த இரண்டு வீடுகளிலும் ரைடு நடத்தச் சென்றனர். அப்போது வீட்டுக்குள் சென்றவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.
அங்கு துடைத்து வைக்கப்பட்டதுபோல் கிளீனாக இருந்தைக் கண்ட போலீசார் பொய்யான தகவலாக இருக்குமோ என நினைக்க ஆரம்பித்தனர். அப்போது வீட்டுக்குள் புழுக்கமாக இருந்ததால் ஃபேனைப் போட்ட காவலர் அதிர்ந்து போனார். ஏனென்றால் ஸ்விட்சைப் போட்டதும் அந்த ஸ்விட்ச் போர்டு உள்பக்கமாக கதவு போல் திறந்து கொண்டது. உள்ளே பார்த்தால் ஒரு நூற்றுக்கணக்கான மதுபான பாட்டில்கள் பெட்டி பெட்டியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
ஒரு மினி பாரே நடத்தும் அளவுக்கு அதற்குள் மதுபானங்கள் இருந்தன. சுவற்றுக்குள் சுரங்கம் அமைத்து ரகம் ரகமாக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை மொத்தமாக தூக்கினர் போலீசார். அதன் பிறகு அருகில் உள்ள மற்றொரு வீட்டுக்கு சென்ற போலீசார் இஞ்ச் பை இஞ்சாக தேடியும் எந்த மதுபாட்டிலும் கிடைக்கவில்லை. கடுப்பான காவலர் ஒருவர், அந்த இன்டலிஜெண்ட், கிரிமினல்ஸ், இந்த டாய்லெட்டில் கூட மதுபானங்களை மறைத்து வைத்திருப்பார்கள் என கோபத்தில் எட்டி உதைத்திருக்கிறார்.
கொடுமை என்னவென்றால், உண்மையிலேயே அந்த கழிப்பறை இருக்கைக்கு அடியில் தான் அந்த ரகசிய அறை அமைந்திருந்தது. அதைத் திறந்து பார்த்த போலீசாருக்கு மயக்கமே வந்து விட்டது. உள்ளே பண்டல் பண்டலாக வெளிநாட்டு உயர் ரக மது பாட்டில்கள், பீர் கேன்கள் என கொட்டிக் கிடந்தன. மொத்தம் இரு இடங்களில் இருந்தும் 792 சீல் வைக்கப்பட்ட மது பாட்டில்கள் மற்றும் பீர் கேன்கள் மீட்கப்பட்டன.
இதேபோல் அகமதாபாத்தின் சந்த்கேடா பகுதியில் உள்ள சவிதாநகரில் பூமியிலிருந்து தோண்ட தோண்ட மதுபான பாட்டில்கள் வந்து கொண்டே இருந்தன. பல்வேறு மதுக்கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் பூமிக்கடியில் ஒரு ஒயின்ஷாப்பையே மறைத்து வைத்திருந்தனர். போலீசாரின் தேடுதல் வேட்டையில் 229 மது பாட்டில்கள் மற்றும் பீர் கேன்கள் கைப்பற்றப்பட்டன.
சரக்கை மறைப்பதில் சாகசம் புரிந்த குற்றவாளிகளான, ரமிலாபென் காந்திலால் ஜடேஜா, பாரத் லக்ஷ்மண் பாய் ரத்தோட் மற்றும் ரஷ்மி பென் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2013, 2014ஆம் ஆண்டுகளில் பல சிறைகளைக் கண்ட சிறைப்பறவைகள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
August 14, 2025 3:58 PM IST
மதுபாட்டில் விற்பனை.. வீட்டின் கழிவறை, ஸ்விட்ச் போர்டுகளில் சோதனையிட்ட போலீசாருக்கு அதிர்ச்சி!


