புதுடெல்லி: யு-17 ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று கிர்கிஸ்தானில் உள்ள பிஷ்கெக் நகரில் கடந்த வாரம் நடைபெற்றது.
இதில் ‘ஜி’ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணியானது கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் அணிகளை தோற்கடித்தது. இந்த இரு ஆட்டங்களிலும் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் 6 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து அடுத்த ஆண்டு சீனாவில் நடைபெற உள்ள யு-17 ஆசிய கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றது. யு-17 ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி சுற்றின் வாயிலாக இந்திய மகளிர் அணி தேர்வு செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.
இதற்கு முன்னர் கடந்த 2005-ம் ஆண்டு தொடரில் இந்திய அணி விளையாடி இருந்தது. ஆனால் அப்போது தகுதி சுற்று இல்லாமல் இந்திய அணி நேரடியாக பங்கேற்றிருந்தது. இந்நிலையில் ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்ற இந்திய யு-17 மகளிர் கால்பந்து அணிக்கு சுமார் ரூ.22 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அகில இந்திய கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.

