Last Updated:
ஒன் எக்ஸ் பெட் சூதாட்ட வழக்கில் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, மிமி சக்ரவர்த்தி, சோனு சூட் உள்ளிட்டோரின் சொத்துக்கள் அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியது.
1000 கோடி ரூபாய் சட்ட விரோத சூதாட்ட செயலி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா சொத்துக்களை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியுள்ளது.
ஒன் எக்ஸ் பெட் என்ற சட்ட விரோத ஆன்லைன் சூதாட்ட செயலி மூலம் 1000 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.பி. மிமி சக்ரவர்த்தி, நடிகர் சோனு சூட், நடிகை நேஹா சர்மா, நடிகை ஊர்வசி ரவுட்டேலாவின் தாயார் ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
இதனை தொடர்ந்து யுவராஜ்சிங், ராபின் உத்தப்பா, மிமி சக்ரவர்த்தி, சோனு சூட், நேஹா சர்மா, ஊர்வசி ரவுட்டேலாவின் தாய் உள்ளிட்டோரின் 7 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கி உள்ளது.
முன்னதாக, இதே வழக்கில், ஷிகர் தவானுக்குச் சொந்தமான ₹4.55 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும், சுரேஷ் ரெய்னாவுக்குச் சொந்தமான ₹6.64 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்திருந்தது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை ₹19.07 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.


