Last Updated:
யுபிஐ பரிவர்த்தனையில் ரூ. 2000க்கு மேல் ஜிஎஸ்டி விதிக்கப்படுமா என எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதி அமைச்சகம் பதில் கொடுத்துள்ளது.
யுபிஐ பரிவர்த்தனையில் ரூ. 2000க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் அதற்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுமா என எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதி அமைச்சகம் பதில் கொடுத்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 21ஆம் தேதி துவங்கி நடைபெற்றுவருகிறது. ஆனால், கூட்டத் தொடர் துவங்கியதில் இருந்து இன்று வரை தொடர்ந்து மூன்று நாளாக எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்திய அமைச்சரவையில் இருந்து பதில்கள் தரப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மாநிலங்களவை உறுப்பினர் அணில் குமார் யாதவ், யுபிஐ பரிவர்த்தனையில் ரூ. 2000க்கு மேல் பரிவர்த்தனை செய்தால், அதற்கு ஜிஎஸ்டி விதிக்கும் திட்டம் மத்திய அரசிடம் இருக்கிறதா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, இப்படியான முடிவுகள் ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரையின் பேரிலே எடுக்கப்படும். தற்போது வரை அப்படியான எந்தப் பரிந்துரையும் கவுன்சிலுக்கு வரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பதிலில், “வருவாய்த் துறையால் தெரிவிக்கப்பட்டபடி, ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் விலக்குகள் ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. இது மத்திய மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அரசியலமைப்பு அமைப்பாகும். ஜிஎஸ்டி கவுன்சிலிடமிருந்து அத்தகைய பரிந்துரை எதுவும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு பெரும்பான்மையான பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் சிறு வியாபாரிகள் ஈட்டியுள்ள லாபத்தை கணக்கிட்டு, ஜிஎஸ்டி கவுன்சில் அவர்களுக்கு வரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால், அம்மாநிலத்தின் சிறு வியாபாரிகள் தங்கள் கடைகளில் இனி யுபிஐ சேவை பயன்படுத்த மாட்டோம். வாடிக்கையாளர்கள் பணத்தைக் கொண்டே பரிவர்த்தனை செய்ய வேண்டும் எனும் முடிவையும் எடுத்துள்ளனர்.
இந்தச் சூழலில், யுபிஐ பரிவர்த்தனையில் ரூ. 2000க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் ஜிஎஸ்டி விதிக்கப்படுமா எனும் கேள்விக்கு மத்திய நிதி அமைச்சகம் தற்போதைக்கு அப்படியான எந்தத் திட்டமும் இல்லை என பதில் அளித்துள்ளது.
July 23, 2025 7:18 PM IST


