நிர்ணயிக்கப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட விலையை விட அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்ததற்காக, யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று வணிக நிறுவனங்களுக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் மொத்தம் ரூ. 668,000 அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார ஆணையத்தின் (CAA) மாவட்ட புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனைகளைத் தொடர்ந்து இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு உணவகம் மற்றும் மதுபானக் கடை ஒன்றில், ஒரு லிட்டர் குடிநீர் போத்தலின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 120 ஆக இருந்தபோதிலும், அதை ரூ. 200-க்கு விற்பனை செய்ததற்காக ரூ. 300,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
CAA வலியுறுத்து
இதற்கிடையில், மற்றொரு உணவகத்தில், ஒரு குளிர்பான போத்தலை அதன் அச்சிடப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்றதற்காக ரூ. 100,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு கிலோ பொன்னி சம்பா அரிசியை அதிகபட்ச சில்லறை விலையான ரூ. 255-க்கு மேல் விற்றதற்காக வழக்குத் தொடரப்பட்டதைத் தொடர்ந்து, மற்றொரு வியாபாரிக்கு ரூ. 268,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, அந்த அரிசி பால் பொன்னி அரிசி என்று உரிமையாளர் கூறியதாகவும், இருப்பினும், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சி.ஏ.ஏ சமர்ப்பித்த ஒரு மாதிரியை அரிசி ஆராய்ச்சி நிறுவனம் பரிசோதித்ததில், அந்த இருப்பு இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா அரிசி என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொருட்களை வாங்குவதற்கு முன் அச்சிடப்பட்ட விலை மற்றும் அதிகபட்ச சில்லறை விலையைச் சரிபார்க்குமாறும், முறைபாடுகளை வழங்கும்போது ஆதாரமாக ரசீதுகளைப் பெற்றுப் பாதுகாத்து வைக்குமாறும் நுகர்வோரை CAA வலியுறுத்தியுள்ளது.
மேலும், நுகர்வோர், வர்த்தக விதிமீறல்கள் எனச் சந்தேகப்படுபவற்றை, நுகர்வோர் விவகார ஆணையத்தின் 1977 என்ற உதவி எண் மூலம், பணி நேரங்களில் முறைபாடளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

