[ad_1]
8 மற்றும் 9ஆம் தேதி என இரண்டு நாட்களாக நீடித்த அந்தப் போராட்டம் நேபாள பிரதமர் சர்மா ஒலி மற்றும் அதிபர் ராம் சந்திர பவுடல் ஆகியோரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, ராணுவம் அதிகாரத்தை கையில் எடுத்தப்பின் நேற்றோடு முடிவுக்கு வந்தது.
போராட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து நாட்டின் அடுத்த பிரதமர் யார், அதுவரை இடைக்காலத் தலைவராக யாரை நியமிப்பது என்றும் அந்நாட்டு இளைஞர்கள் சுமார் 5,000 பேர் கூடி இன்று காணொளி வாயிலாக விவாதித்தனர். இதில், இடைக்கால தலைவராக நேபாள உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி தேர்வாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் இந்தியாவில் முதுநிலை அரசியல் அறிவியல் பாடத்தில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பலேன் என்கிற பாலேந்திர ஷா 1990ல் நேபாளம், காத்மண்டுவில் பிறந்தவர். நியூவர் புத்த குடும்பத்தில் பிறந்த இவர் தற்போது காத்மண்டுவில் நேர்மையான அரசியலை முன்னெடுத்துவருவதாகவும், அதன் காரணமாக பெரும் அளவில் கவனம் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் இருக்கின்றன.
நேர்மையான அரசியலுக்காக பெயர் பெற்றதற்கு முன்பாகவே பாலேந்திர ஷா, ஹிப்-ஹாப் பாடகராக நேபாளம் முழுவதும் மிகவும் பிரபலமாக அறியப்பட்டவர். 2012ஆம் ஆண்டு, தான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே தனது முதல் ஹிப்-ஹாப் பாடல் ஆல்பத்தை அவர் வெளியிட்டார். அதன் பின் தொடர்ந்து யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் நேபாளம் மக்களின் கவனத்தை பெரிதாக ஈர்த்துவந்துள்ளார்.
ஹிப்-ஹாப் பாடகரான பாலேந்திர ஷா, பாடலாசிரியராகவும் இருந்தார். இவரது பாடல் வரிகள் பெரும்பாலும், ஊழல், சமத்துவமின்மை மற்றும் நாடு காணவேண்டிய மாற்றம் உள்ளிட்டவற்றை சுற்றியே இடம் பெற்றிருக்கின்றன. இதன் காரணமாக இளைஞர்கள் மத்தியில் அதிகம் அறியப்பட்டுள்ளார் பாலேந்திர ஷா.
நேபாளத்தில் சிவில் இன்ஜினியரிங் முடித்த பாலேந்திர ஷா, பிறகு இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் கட்டமைப்பு பொறியியல் முதுகலைப் பட்டம் பெற்றார்.
பிறகு நேபாளம் திரும்பிய பாலேந்திர ஷா, 2022ஆம் ஆண்டு நடந்த நேபாள மேயர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கினார். அந்தத் தேர்தலில் இவரை எதிர்த்து போட்டியிட்ட நன்கு அறியப்பட்ட கட்சியின் வேட்பாளர்களைத் தோற்கடித்து 61,000 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றார். இவர் மேயரான பிறகு காத்மண்டு சிறப்பாக இருப்பதாகவும் அந்நாட்டு மக்கள் கருதுகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக நடந்த போராட்டத்தின் பின் பாலேந்திர ஷா இருந்ததாகவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டுவருகிறது. அதற்கு ஏற்றார்போல் அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போராட்டம் துவங்கும் 8ஆம் தேதிக்கு முந்தையதினம் அதாவது செப்டம்பர் 7ஆம் தேதி ஒரு முக்கிய பதிவை வெளியிட்டார்.
அந்தப் பதிவில், “நாளை நடைபெற போகும் Gen Z பேரணி தனிச்சையான 28 வயதுக்கு உட்பட்டவர்களின் பேரணி என்பது தெளிவாக தெரிகிறது. வயது வரம்பு காரணமாக நான் அந்தப் பேரணியில் பங்கேற்க முடியாது. ஆனால், அவர்களின் விருப்பம், நோக்கம், சிந்தனை ஆகியவற்றை நான் புரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
நாளை நடைபெறும் இந்த தன்னிச்சையான பேரணியில் எந்தக் கட்சி, அரசியல்வாதி, ஆர்வலர், எம்.பி., பொறியாளர்கள் என யாரும், புத்திசாலித்தனமாக தங்கள் நலன்களைப் பூர்த்தி செய்ய முனைப்புக்காட்டக் கூடாது. வயது வரம்பு காரணமாக நான் செல்ல முடியாது. ஆனால் எனது முழு ஆதரவு உண்டு. அன்புள்ள Gen Z, நீங்கள் எந்த வகையான நாட்டைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்று சொல்லுங்கள்?” எனத் தெரிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
September 10, 2025 9:42 PM IST
யார் இந்த பாலேந்திர ஷா? மேயரான ராப் பாடகரை பிரதமராக்க வேண்டும் என குரல் கொடுக்கும் நேபாள Gen Zக்கள்; என்ன காரணம்?