யார் இந்த தர்மேந்திர பிரதான்? இவர் பதவி விலகினால் தான் போராட்டம் வாபஸ் என CJP இளைஞர்கள் கூறுவது ஏன்?
மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளைஞர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் மிக உறுதியாக இருக்கின்றனர். நீட் தேர்வு குளறுபடிகளுக்கு தார்மீக பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கை.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, நீட் தேர்வு தோல்வியால் மாணவர்கள் தற்கொலை, இந்திய கல்வி முறையில் சீர்த்திருத்தம் ஆகியவற்றை கண்டித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தலைநகர் டெல்லியில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவி வருகிறது. பிரதமர் மோடி வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி தந்தும் தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் தான் போராட்டம் வாபஸ் என இவர்கள் கூறுகின்றனர். யார் இந்த தர்மேந்திர பிரதான் என்பதை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தற்போது மத்திய கல்வி துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் தர்மேந்திர பிரதான் இந்திய அரசியலில் மிக முக்கியமான ஒரு தலைவர். ஒடிசாவை சேர்ந்த இவர், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார். இவர் புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
1983ஆம் ஆண்டு அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் இணைந்து மாணவர் அரசியலில் ஈடுபட்டார். அப்போதே வினாத்தாள் கசிவு விவகாரத்தை எதிர்த்து பெரிய போராட்டம் நடத்தியவர். இது தான் அவரது அரசியல் வாழ்க்கையின் தொடக்க புள்ளி. 1998இல் பாஜகவில் இணைந்தார். 2000ஆம் ஆண்டு ஒடிசா சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2004ஆம் ஆண்டு ஒடிசாவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
2014ஆம் ஆண்டு முதல் 2021 வரை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சராக இருந்தார். பின்னர் 2021இல் மத்திய கல்வி துறை அமைச்சராக பொற்றுப்பேற்றார். இடையே 2017-24 வரை திறன் மேம்பாட்டு துறை அமைச்சரகவும், 2019-21 வரை எஃகு துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். அந்த வகையில் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் தவிர்க்க முடியாத ஒரு நபர்.
தேர்தல் வேட்புமனுவில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களின்படி, தர்மேந்திர பிரதானின் சொத்து மதிப்பு சுமார் 6.92 கோடி ரூபாய். சுமார் 53 லட்சம் ரூபாய் வரை கடன் வைத்துள்ளர். ஒடிசாவில் விவசாய நிலம் வைத்துள்ளார். அது தவிர சொந்தமாக வீடு, 200 கிராம் தங்கம் 2.5 கிலோ வெள்ளியை சொந்தமாக கொண்டுள்ளார்.
நீட் தேர்வு விவகாரத்தில் சர்ச்சையின் மையமாக இருப்பதே தர்மேந்திர பிரதான் தான். நீட் தேர்வு குளறுபடிகளை தடுக்க தவறியது, குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்காதது ஆகியவற்றுக்கு பொறுப்பேற்று இவர் பதவி விலக வேண்டும் என்பதே இளைஞர்களின் கோரிக்கை. இந்நிலையில் மாணவர்கள் போராட்டத்திற்கு அடிபணிந்து மோடி அரசு பிரதானை பதவி விலக செய்யுமா என்பது விரைவில் தெரிய வரும்.

