சைவ உணவு விரும்பி, இசைக் கலைஞர், சிக்கலான தருணங்களில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடியவர். பொதுவுடைமை கொள்கையை தீவிரமாக பின்பற்றுபவர் என அறியப்படும் பிரிட்டனின் புதிய பிரதமர் யார் என இந்த தொகுப்பில் காணலாம்.
தனது 52-வது வயதில் அரசியலில் கால் பதித்து 61 ஆவது வயதில் அதாவது ஒன்பதே ஆண்டுகளில் நாட்டின் பிரதமராகியுள்ளார் கியர் ஸ்டார்மர். 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி 85 ஆண்டுகளில், இல்லாத பின்னடைவை சந்தித்து. இதனை தொடர்ந்த தொழிலாளர் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற ஸ்டார்மர் ஐந்தே ஆண்டுகளில் கட்சிக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்து அரியணையில் ஏறியுள்ளார்.
1963- ஆம் ஆண்டு பிறந்த ஸ்டார்மரின் தந்தை தொழிற்சாலை ஒன்றில் டூல் மேனாக பணியாற்றியவர். அவரது தாயர் செவிலியாக இருந்தவர். சோஷியலிச கருத்துக்களை கொண்ட ஸ்டார்மரின் பெற்றோர், அவருக்கு தொழிலாளர் கட்சியின் நிறுவனரான கியெர் ஹார்டியின் பெயரை சூட்டினர். இளம் வயதிலேயே சோஷியலிச கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட ஸ்டார்மர் தனது 16 வயதில் தொழிலாளர் கட்சியின் சோஷியலிஸ்ட் கூட்டமைப்பில் உறுப்பினராக சேர்ந்தார். புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வழக்கறிஞராக பதிவு செய்தார்.
மனித உரிமைகளில் நிபுணத்துவம் பெற்று ஆப்பிரிக்கா, கரீபியன் ஆகிய பிராந்தியங்களில் உள்ள தூக்குத்தண்டனை கைதிகளுக்காக வாதாடினார். ஏழை எளிய மக்களுக்கு மனித உரிமை சார்ந்த வழக்குகளில் இலவசமாக வாதாடி நீதி பெற்று தந்தார். 2006- ஆம் ஆண்டு லண்டனில் ரஷ்ய உளவாளி அலெக்சாண்டர் லிட்வினென்கோ கொல்லப்பட்ட சம்பவத்தில், அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக ஸ்டார்மர் வழக்கு தொடர்ந்து வாதாடினார்.
பின்னர் பிரிட்டன் பப்ளிக் பிராசிக்யூசன் இயக்குநராக பணியாற்றி வந்தார். அப்போது, எண்ணிலடங்கா ஏழைகளுக்கு இலவச சட்ட உதவிகளை செய்தார். இதன காரணமாக பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் ஸ்டார்மருக்கு சர் பட்டம் வழங்கி கவுரவித்தார். ஆனால் ஸ்டார்மர் மன்னர் ஆட்சியையும் பிரிட்டன் அரசு குடும்பத்தையும் கடுமையாக விமர்சித்து வருபவர்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு எதிரான கருத்தை கொண்டிருந்த ஸ்டார்மர், பிரெக்சிட்-க்கு எதிராக இரண்டாவது முறையாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.
2019ஆம் ஆண்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போது ஸ்டார்மர் தலைமையில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் காஷ்மீரில் மனித உரிமை தொடர்பான சிக்கல்கள் இருப்பதாகவும் அம்மக்களுக்கு சுய நிர்ணய உரிமையை வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்வினையாற்றியது. தற்போதைய தேர்தல் பரப்புரையில் தனது நிலைப்பாட்டை மாற்றிகொண்டார் ஸ்டார்மர்.
இதையும் படிங்க :
பிரிட்டன் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி: புதிய பிரதமரானார் கீர் ஸ்டார்மர்
மேலும் ‘ஹிந்துஃபோபியா’ எனப்படும் ஹிந்துக்களுக்கு எதிரான செயல்களை வன்மையாக கண்டிப்பதாக தமது தேர்தல் பிரச்சாரத்தின்போது ஸ்டார்மர் கூறியிருந்தார். பிரிட்டன் வாழ் இந்தியர்கள் தீபாவளி, ஹோலி போன்ற ஹிந்து பண்டிகைகளை கொண்டாடுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகத்துக்கான ஒப்பந்தம் மேற்கொள்வதை அவர் நோக்கமாக கொண்டுள்ளதையும் அவரது தேர்தல் அறிக்கை வெளிப்படுத்தி இருந்தது. மேலும் கல்வி, காலநிலை மாற்றம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்தவும், இந்தியாவை வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக அங்கீகரிப்பதில் ஸ்டார்மர் நாட்டம் கொண்டுள்ளார் என்பதையும் அவரது தேர்தல் அறிக்கை கோடிட்டு காட்டியிருந்தது. முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் இந்தியாவிற்கு மிகவும் நெருக்கமானவராக பார்க்கப்படுபவர், அந்த இடத்தை ஸ்டார்மரும் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
