Last Updated:
சிரியா, லெபனான், ஏமன் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் ஈரானின் ஆதரவு பெற்ற குழுக்கள் மூலமாக அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக கமேனி செயல்பட்டு வருகிறார்.
ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவரான ஆயத்துல்லா கமேனியை ஈரான் மற்றும் அமெரிக்க நாடுகள் கடுமையாக எதிர்ப்பதற்கான காரணங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆயதுல்லா அலி கமேனி ஈரானின் ஆன்மீகத் தலைவர் மட்டுமல்ல, அந்த நாட்டின் அரசியல் மற்றும் ராணுவ அதிகாரத்தின் உச்சப்புள்ளியும் ஆவார். 1939-ல் பிறந்த இவர், 1979-ல் நடந்த இஸ்லாமியப் புரட்சியில் முக்கியப் பங்கு வகித்தார். புரட்சிக்குப் பிறகு ஈரானின் அதிபராகப் பதவி வகித்த இவர், 1989-ல் முதல் உச்ச தலைவர் ருஹோல்லா கொமேனியின் மறைவுக்குப் பிறகு அந்தப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஈரானின் அரசியலமைப்பின்படி, உச்ச தலைவர் என்பது அதிபரை விடவும் அதிக அதிகாரம் கொண்ட பதவியாகும். ராணுவம், நீதித்துறை, ஊடகங்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கை என அனைத்திலும் இவருடைய முடிவே இறுதியானது. குறிப்பாக, ஈரானின் மிகவும் பலம் வாய்ந்த ‘புரட்சிகர காவல் படை’ (IRGC) நேரடியாக இவரது கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
பல தசாப்தங்களாக ஈரானை ஒரு மதச்சார்பற்ற நாடாக மாற்றத் துடிக்கும் மேற்கத்திய நாடுகளுக்கு சவாலாக, இஸ்லாமியக் கொள்கைகளின் அடிப்படையில் நாட்டை வழிநடத்தி வருகிறார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இவரைத் தீர்க்கமாக எதிர்ப்பதற்குப் பின்னால் மிக முக்கியமான அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்கள் உள்ளன.
முதலாவதாக, இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்க கமேனி மறுப்பதோடு, அதை “புற்றுநோய் கட்டி” என்று விமர்சித்து வருகிறார். இஸ்ரேலுக்கு எதிராகப் போராடும் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளுக்கு ஈரான் வழங்கும் ஆயுத மற்றும் நிதி ஆதரவு, இஸ்ரேலின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளது.
இரண்டாவதாக, ஈரானின் அணுசக்தித் திட்டம். கமேனியின் தலைமையிலான ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது, இது மத்திய கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்கைச் சிதைக்கும் என வாஷிங்டன் அஞ்சுகிறது. மூன்றாவதாக, பிராந்திய ஆதிக்கம். சிரியா, லெபனான், ஏமன் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் ஈரானின் ஆதரவு பெற்ற குழுக்கள் மூலமாக அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக கமேனி செயல்பட்டு வருகிறார்.
இதன் காரணமாகவே, ஈரானில் ‘ஆட்சி மாற்றம்’ கொண்டு வரவும், கமேனியின் அதிகாரத்தை முடக்கவும் அமெரிக்காவும் இஸ்ரேலும் தற்போது தீவிரமான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன


