Last Updated:
Ajit Pawar | யாருக்கும் பாதுகாப்பு இல்லை என தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, ”சரத் பவாருடன் அஜித் பவார் மீண்டும் இணைய இருந்த நிலையில் விமான விபத்தில் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
“சரத் பவாருடன் அஜித் பவார் மீண்டும் இணைய இருந்த நிலையில் விமான விபத்தில் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் பாராமதியில் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அந்தமாநிலத்தின் துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார், லியர்ஜெட் 45 என்ற சிறிய ரக விமானத்தில் மும்பையில் இருந்து பாராமதிக்கு சென்றார். பாராமதி விமான நிலையத்தில் அந்த விமானத்தை தரையிறக்க விமானி முயற்சித்த போது பழுது ஏற்பட்டதாக தெரிகிறது. அதனால் விமானி அவசரமாக விமானத்தை தரையிறக்கியபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. விமானத்தில் எரிபொருள் அதிகம் இருந்த நிலையில் உடனடியாக தீப்பற்றியது. விமானத்தின் சிதறிய பாகங்களை வைத்து எந்த திசையில் மற்றும் வேகத்தில் விமானம் சென்றது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, ”சரத் பவாருடன் அஜித் பவார் மீண்டும் இணைய இருந்த நிலையில் விமான விபத்தில் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், “மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்தது குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என கேட்டுக்கொண்டுளார்.
மேலும் விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்தது குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் எங்களுக்கு உச்சநீதிமன்ற விசாரணை மீது மட்டுமே நம்பிக்கை இருக்கிறது எனவும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
முன்னதாக அஜித் பவாரின் உயிரிழப்புக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். ஈடு செய்யவே முடியாத இழப்பு என குறிப்பிட்டுள்ள திரவுபதி முர்மு, மகாராஷ்டிராவின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர் அஜித் பவார் என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி பதிவிட்டுள்ள இரங்கல் பதிவில், பொதுமக்களுடன் வலுவான பிணைப்புடன் இருந்த மக்கள் தலைவர் அஜித் பவார் என தெரிவித்துள்ளார். அவரது மரணம் வேதனையளிப்பதாகவும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அஜித் பவாரின் உயிரிழப்பு செய்தி அறிந்து துயரமடைந்ததாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் , கடந்த 30 ஆண்டுகளாக மகாராஷ்டிராவில் உள்ள ஒவ்வொரு பிரிவினரின் நலனுக்காகவும் அஜித் பவார் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட விதத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்த செய்தியை கேட்டு மனமுடைந்ததாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்த துயர நேரத்தில் மகாராஷ்டிர மக்களுடன் துணை நிற்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.


