Last Updated:
யமுனா விரைவு சாலையில் பனிமூட்டம் காரணமாக 7 பேருந்துகள், 3 கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மோதி தீப்பற்றி 13 பேர் பலி.
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகி சட்டென ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் தீப்பற்றி எரிந்த பதைபதைக்கும் சம்பவத்தில் இதுவரை 13 பேர் வரை பலியாகியுள்ளனர்.
வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் காரணமாக சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலை காணப்படுவதால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் டெல்லி மற்றும் ஆக்ராவை இணைக்கும் முக்கிய சாலையான யமுனா விரைவு சாலையில் இன்று காலை சுமார் 4.30 மணிக்கு பனிமூட்டம் காரணமாக பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், ஒன்றன்பின் ஒன்றாக 7 பேருந்துகள், 3 கார்கள் உள்ளிட்ட பிற வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. அதுமட்டுமின்றி விபத்து ஏற்பட்டதும், வாகனங்களும் சட்டென தீப்பற்றி கொளுந்து விட்டு எரிந்தன. இந்த கோர விபத்தில் இதுவரை 13 பேர் வரை பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 25 பேர் வரை காயமடைந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும், தீயை அணைக்கும் பணியிலும், மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மதுரா, காவல் கண்காணிப்பாளர் ஷ்லோக் குமார், “யமுனா விரைவு சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், ஏழு பேருந்துகளும், மூன்று கார்களும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “யமுனா விரைவு சாலையில் ஏற்பட்ட விபத்து, உயிரிழப்புகள் செய்தி அறிந்து மனமுடைந்தேன். விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
December 16, 2025 9:52 PM IST


