
நிந்தவூர் மாட்டுப்பள்ளை பகுதியில் மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் ஆடை சிக்குண்டு இடம்பெற்ற விபத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பள்ளை பகுதியில் நேற்று (22) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 26 வயதுடைய மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நிந்தவூர் 9ஆம் பிரிவு மையவாடி வீதியைச் சேர்ந்த பக்கீர் முகைதீர் பிஸ்மி பாத்திமா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
பல்கலைக்கழக இறுதியாண்டுக்கான பாடச் சமர்ப்பிப்பைத் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று நிறைவுசெய்துவிட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இக்கோர விபத்து நேர்ந்துள்ளது.
மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த மாணவியின் ஆடை எதிர்பாராதவிதமாகப் பின் பக்க டயரில் சிக்குண்டதால், மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மாணவி உடனடியாகக் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
தலையில் ஏற்பட்ட பாரிய காயம் மற்றும் தீவிர இரத்தப்போக்கு காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளதாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவிக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், அவரது கணவர் வெளிநாடொன்றில் பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி – பாறுக் ஷிஹான்

