ரோம்: ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி செல்லும் பிரதமர் மோடிக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து அங்கு காந்தி சிலையை உடைத்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
18-வது லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. பிரதமராக நரேந்திர மோடி 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். மத்திய அமைச்சர்களும் பதவியேற்றதுடன் துறைகளில் பொறுப்பேற்றும் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் 3-வது முறையாக பிரதமரான பின்னர் நாளை முதலாவது வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார் நரேந்திர மோடி. தற்போது உலக நாடுகளின் முக்கிய அமைப்புகளில் ஒன்றாக இருக்கும் ஜி 7-ன் தலைமை பொறுப்பை இத்தாலி வகிக்கிறது. இந்த ஆண்டு ஜி 7 உச்சி மாநாட்டை நடத்தும் இத்தாலி, இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி நாளை இத்தாலி புறப்பட்டுச் செல்கிறார். இத்தாலியின் அபுலியாவில் நாளை முதல் வரும் 15-ந் தேதி ஜி 7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடியும் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடியுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் தலைமையிலான குழுக்களும் ஜி 7 மாநாட்டுக்கு செல்கிறது. இதனிடையே இத்தாலியில் மகாத்மா காந்தியடிகள் சிலையை காலிஸ்தான் தீவிரவாதிகள் உடைத்திருக்கின்றனர்.
அத்துடன் பிரதமர் மோடி, இத்தாலி வருகை தர எதிர்ப்பு தெரிவித்தும் சுவரொட்டிகளை வீசி உள்ளனர். அதில் காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் படுகொலையை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு இந்த பயங்கரவாதிகள் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.


