பிரதமர் நரேந்திர மோடியின் ‘பரமாத்மா’ கருத்தை விமர்சித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி திங்கள்கிழமை பிரசாரம் செய்தார்.
தேர்தலுக்கு பிறகு அதானி குறித்து மோடியிடம் அமலாக்கத்துறை விசாரிக்கும்போது சமாளிக்கதான் பரமாத்மா கதையை மோடி கூறியதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
பிகாரில் ’இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பக்தியார்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவுடன் இணைந்து ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:
“பிரதமர் மோடியின் ‘பரமாத்மா’ கதையை தற்போது ஏன் கூறினார் தெரியுமா? தேர்தலுக்கு பிறகு அதானி குறித்து மோடியிடம் அமலாக்கத்துறையினர் விசாரிக்கும் போது, எனக்கு எதுவும் தெரியாது, பரமாத்மாதான் என்னிடம் கேட்டார் என்று கூறுவதற்காகதான்.
நீண்ட பேச்சுகளையும், நாட்டை பிளவுப்படுத்துவதையும் நிறுத்துங்கள். நாட்டின் எத்தனை இளைஞர்களுக்கு வேலை வழங்கியுள்ளீர்கள் என்பதை நாட்டு மக்களுக்கும், பிகார் மக்களுக்கும் சொல்லுங்கள்.
22 முதல் 25 ராஜாக்கள் மற்றும் மகாராஜாக்களை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். அவர்களில் அதானி, அம்பானிக்காகதான் 24 மணிநேரமும் உழைத்துக் கொண்டுள்ளார்.” என்று விமர்சித்தார்.