சிறுமியை வீட்டுப் பணிப்பெண்ணாக ஜோர்டானுக்கு அனுப்பிய 59 வயது நபர் ஒருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் தனது பாட்டியுடன் வசித்து வந்த சிறுமிக்கு போலி பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டையை உருவாக்கியுள்ளார்.
தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 300,000 ரூபாய் நட்டஈடு வழங்கவும் உத்தரவிட்டார்.
இழப்பீடு வழங்கத் தவறினால் மேலும் ஒன்றரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி எச்சரித்தார்.
குறித்த சிறுமி வெளிநாடு சென்று இரண்டு மாதங்களுக்குள் அவர் வேலை செய்த வீட்டினரால் சித்திரவதை செய்யப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி பின்னர் 2008 ஆம் ஆண்டு இலங்கைக்கு திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர் நாடு திரும்பவில்லையென்றால், மத்திய கிழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிசானா நபீக்கிற்கு நேர்ந்த கதியே சிறுமிக்கும் ஏற்பட்டிருக்கும் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கல்முனை பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான பிரதிவாதிக்கு எதிரான குற்றப்பத்திரிகை, சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் ஒன்பது வருடங்களின் பின்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.