திமுக நிறுவனர் மு. கருணாநிதியின் பேத்தியும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளுமான கயல்விழி, சென்னை கிண்டியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி (SBI) கிளை மேலாளரைச் அலுவலகத்தில் வைத்து அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கி அமைந்துள்ள கட்டிடத்தில் உள்ள பழுதான மின்தூக்கி (Lift) தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து அவர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான சிசிடிவி (CCTV) காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
வங்கி மேலாளரைத் தாக்கி மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில் கயல்விழி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வெளியாகி உள்ள சிசிடிவி காட்சிகளில், கயல்விழி வங்கி மேலாளரின் அறைக்குள் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவது பதிவாகியுள்ளது. இந்த வாதத்தின் போது, அவர் மேலாளரின் உடல்மொறிகளை நக்கல் செய்வது போன்று நடித்துவிட்டு, திடீரென அவரது கன்னத்தில் பலமாக அறைவது பதிவாகியுள்ளது. அதன்பிறகு அவர் மேலாளரை மீண்டும் தாக்க முயன்றபோது, அவருடன் வந்திருந்த நபர் ஒருவரால் தடுத்து நிறுத்தப்படுகிறார; அந்த நபர் கயல்விழியின் கையைப் பிடித்து அமைதிப்படுத்த முயல்வதையும் அக் காட்சிகளில் காண முடிகிறது.
சென்னையின் அடையாறு பகுதியில் உள்ள எஸ்பிஐ என்.ஆர்.ஐ. (NRI) கிளையில் கடந்த ஜூலை 20 ஆம் திகதி இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மின்தூக்கி பழுது காரணமாகத் தகராறு:
காவல்துறையினரின் தகவலின்படி, குறித்த எஸ்பிஐ கிளை இயங்கும் வணிக வளாகக் கட்டடம் கயல்விழிக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு அவர் வங்கிக்குச் சென்றபோது, கட்டிடத்தில் உள்ள பழுதான மின்தூக்கி தொடர்பாக அவருக்கும் வங்கி மேலாளருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மேலாளரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போதே, கயல்விழி அதிகாரியைக் கன்னத்தில் அறைந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். வங்கி அதிகாரியின் புகாரின் அடிப்படையில், கயல்விழி மீது தாக்குதல் மற்றும் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வங்கியின் சிசிடிவி கேமராக்களில் பதிவான இந்தக் காட்சிகள் கடந்த சனிக்கிழமை சமூக வலைத்தளங்களில் கசிந்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பிடத்தக்க வகையில், கயல்விழியின் மாமனாரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததுடன் ஆட்சியை இழந்தது. நடிகர் விஜய் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


