கொல்கத்தா, ஏப்.11: மேற்கு வங்கத்தில் மக்களவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ்-பாஜக இடையேதான் போட்டி என்று அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி கூறினாா்.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற மம்தா பானா்ஜி மேலும் பேசியதாவது:
‘குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) , பொது சிவில் சட்டம் ஆகியவற்றை மேற்கு வங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. இவற்றை வலுக்கட்டாயமாக நடைமுறைப்படுத்துவதை ஏற்கமாட்டோம். மக்கள் அனைவரும் அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவத்துடன் வாழவேண்டும் என்று விரும்புகிறோம். நாம் ஒற்றுமையுடன் வாழ்ந்தால், நமக்கு யாரும் தீங்கை ஏற்படுத்த முடியாது. ஒற்றுமையை உடைக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது. நான் உயிருடன் இருக்கும் வகை, மாநில மக்களுக்கு யாரும் பிரச்னையை ஏற்படுத்த முடியாது.
மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், சிலா் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் என்ஐஏ உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை வைத்து எதிா்க்கட்சித் தலைவா்களை அச்சுறுத்த நினைக்கின்றனா். அனைத்து தலைவா்களையும் சிறையில் அடைக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக 130 கோடி மக்களையும் சிறையில் அடைக்க முடியுமா?
நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையேதான் போட்டி. இந்தியா கூட்டணி குறித்து பிறகு தீா்மானித்துக்கொள்ளலாம். ஆனால், மேற்கு வங்கத்தில் ஒரு வாக்குகூட வேறு எந்தக் கட்சிக்கும் சென்றுவிடக்கூடாது என்றாா் அவா்.
தேசிய இந்தியா கூட்டணியில் மம்தா இடம் பெற்றாலும், மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் தொகுதி உடன்பாடு மேற்கொள்வதை மம்தா தவிா்த்துவிட்டாா். அங்கு காங்கிரஸும்-இடதுசாரிக் கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.
பாஜக பதிலடி: ‘மம்தா வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக’ பாஜக குற்றஞ்சாட்டியது. மம்தாவின் பேச்சு குறித்து பாஜக மாநிலங்களவை எம்.பி. சமிக் பட்டாச்சாரியா கூறுகையில், ‘ரமலான் பண்டிகை நிகழ்வில் இஸ்லாமியா்களிடையே நல்லுறவு, சகோதரத்துவம் என்ற செய்தியைப் பரப்புவதற்கு பதிலாக, குறுகிய வாக்கு வங்கி அரசியலுக்காக மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறாா்’ என்றாா்.
முன்னதாக, மேற்கு வங்க மாநிலம் பலூா்கட் பகுதியில் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தோ்தல் பிராசரத்தில் புதன்கிழமை ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘சிஏஏ விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி மக்களை தவறாக வழிநடத்துகிறாா். வாக்கு வங்கி அரசியலுக்காக ஊடுருவல்காரா்களை அவா் ஊக்குவிக்கிறாா். எனவே, அகதிகள் எந்தவித அச்சமுமின்றி சிஏஏ சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமைபெற விண்ணப்பிக்க முன்வர வேண்டும்’ என்றாா்.

