Sports
oi-Yogeshwaran Moorthi
அட்லாண்டா: ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு அர்ஜென்டினா அணி முன்னேறுவதற்கு ஃபிஃபா உதவியதாக வெளியான புகைப்படம் ஒன்றை போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ லைக் செய்திருக்கிறார். இதனால் இன்ஸ்டாகிராமில் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ரசிகர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது.
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியிடம் தோல்வி அடைந்தது. 2022ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் போது அர்ஜென்டினா அணிக்கு மிகப்பெரிய ஆதரவு இருந்தது. ஆனால் இந்த உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணிக்கான ஆதரவு அதிகரித்திருந்தாலும், அதற்கு இணையான வெறுப்பும் அதிகமாகவே இருந்தது.

இதற்கு அர்ஜென்டினா அணிக்கு சாதகமாக நடுவர்கள் எடுத்த சில முடிவுகளும், ஃபிஃபா நிர்வாகம் எடுத்த முடிவுகளுமே காரணமாக பார்க்கப்படுகிறது. ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் கேப் வெர்டா, ரவுண்ட் ஆஃப் 16ல் எகிப்து, காலிறுதியில் சுவிர்சர்லாந்து மற்றும் அரையிறுதியில் இங்கிலாந்து என்று அனைத்து அணிகளும் அர்ஜென்டினா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தன.
இந்த குற்றச்சாட்டுகள் ரசிகர்கள் மத்தியிலும் எடுபட்டது. இந்த நிலையில் அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு வர முக்கிய காரணமாக ஃபிஃபா இருந்ததாக ஒரு பத்திரிகையாளர் பேசும் வீடியோவை போர்ச்சுகல் அணியின் ஜாம்பவான் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்ஸ்டாகிராமில் லைக் செய்திருக்கிறார். இதன் ஸ்க்ரீன்ஷாட் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
அந்த வீடியோவில் ஒரு பத்திரிகையாளர், 5 போட்டிகளுக்கு முன்பாகவே ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து அர்ஜென்டினா அணி வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். இந்த உலகிலேயே ஒரு ஊழல் மிகுந்த கூட்டமைப்பு என்றால், அது ஃபிஃபா தான் என்றும் சாடியுள்ளார். இதனை ரொனால்டோ லைக் செய்திருப்பது மெஸ்ஸி மீதான வன்மத்தால் என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
ஏற்கனவே ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ரசிகர்கள் இடையிலான மோதல் உச்சத்தில் இருந்து வருகிறது. அது உலகக்கோப்பை தொடரின் போதே அடுத்தக் கட்டத்திற்கு சென்றது. தற்போது மெஸ்ஸி மீதும், அர்ஜென்டினா அணி மீதும் குற்றம்சாட்டும் ஒரு வீடியோவை ரொனால்டோ லைக் செய்திருப்பது மீண்டும் விவாதமாகி இருக்கிறது.

