Last Updated:
திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த பண்ணை வீட்டிற்கு ஆம்புலன்ஸ் வந்ததால் பரபரப்பு காணப்பட்டது.
கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு திடீரென இதய பிரச்னை ஏற்பட்ட நிலையில் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்து.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா இருந்து வருகிறார். இடதுகை பேட்டரான இவர் பல்வேறு கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வரும் ஸ்மிருதி மந்தனா சமீபத்தில் இந்திய அணி வென்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முக்கிய பங்கு வகித்தார்.
அத்துடன் மகளிர் பிரீமியர் லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாகவும் இருந்து வருகிறார். இவரும் பிரபல இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்
கடந்த சில வாரங்களாக இருவரும் தங்களது காதலை வெளிப்படுத்தி வந்த நிலையில் இன்று இருவரும் திருமணம் செய்து கொள்வதாக இருந்தது.
இதையொட்டி மகாராஷ்டிர மாநிலம் சாங்லியில் உள்ள ஸ்மிருதி மந்தனா குடும்பத்தினருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
அத்தகைய சூழலில் ஸ்மிருதியின் தந்தை சீனிவாஸ் மந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு காணப்பட்டது. முதற்கட்ட தகவலில் திருமணத்திற்கு வந்திருந்த நபர் ஒருவருக்கு இதய பிரச்னை ஏற்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் இதய பிரச்னை ஏற்பட்டிருப்பது ஸ்மிருதி மந்தனாவின் தந்தை சீனிவாஸிற்கு தான் என்பதை ஸ்மிருதியின் மேனேஜர் உறுதி செய்துள்ளார்.
November 23, 2025 5:25 PM IST


