Last Updated:
ஆப்பிள் நிறுவனம் தனது இந்திய உற்பத்தித் தளத்தை படிப்படியாக விரிவுப்படுத்தி வருகிறது.
ஐபோன்களின் தயாரிப்புக்குத் தேவையான லோக்கல் காம்போனென்ட்ஸ்களின் உற்பத்தி அதிகரித்துவரும் சூழலில், பெங்களூரு மற்றும் சென்னைக்கு அருகே இரண்டு பெரிய தொழிற்சாலைகளை அமைக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த தொழிற்சாலைகள் மூலம் மொத்தம் 1,00,000 (1 லட்சம்) பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் (CEA) வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரும், ஹூவர் நிறுவனத்தின் ஹரோல்ட் டபிள்யூ. மெக்ரா, III ஃபவுண்டேஷன் மூத்த ஆய்வாளருமான ரகுராம் ராஜனுடன் ஒரு கலந்துரையாடலில் பேசிய நாகேஸ்வரன், ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விரிவாக்க திட்டம் இந்தியாவின் PLI திட்டத்தின் கீழும், சீனாவிலிருந்து தனது உற்பத்திப் பிரிவைப் பன்முகப்படுத்துவதற்கான ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய உத்திக்கு ஏற்பவும் அமைந்துள்ளது என்றார்.
சில உதிரி பாகங்கள் இப்போது நாட்டிலேயே தயாரிக்கப்படுவதாக சிஇஏ அனந்த நாகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். ஆப்பிள் நிறுவனம் தனது இந்திய உற்பத்தித் தளத்தை படிப்படியாக விரிவுப்படுத்தி வருகிறது. வரிகளின் தாக்கத்தை குறைக்கும் வகையில், அமெரிக்காவை மையமாகக் கொண்ட தனது ஐபோன் உற்பத்தியில் பெரும்பகுதியை சீனாவிலிருந்து தற்போது இந்தியாவிற்கு மாற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறது.
இந்தத் திட்டமானது தமிழ்நாட்டில் உள்ள ஓசூரில் உள்ள டாடா குழுமத்தின் ஆலையையும், பெங்களூரு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குழுமத்தின் உற்பத்தி மையத்தையும் உள்ளடக்கியது. இந்த இரண்டு ஆலைகளும் சமீபத்தில் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் கூட்டாளியாக டாடா நிறுவனத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதற்கான ஒரு அடையாளமாக, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சாலைகள் இந்தியாவின் ஐபோன் உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதியளவை ஈடு செய்யக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவின் ஐபோன் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 53% அதிகரித்து, 23.9 மில்லியன் யூனிட்ஸ்களை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 15.6 மில்லியன் யூனிட்ஸ்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஐபோன்களில் 78% அமெரிக்காவிற்கே அனுப்பப்பட்டதன் மூலம், அந்த நாடு ஒரு முக்கிய ஏற்றுமதி இலக்கு நாடாக உருவெடுத்தது. இது முந்தைய ஆண்டில் பதிவான 53%-ஐ விட அதிகமாகும்.
இதனிடையே நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், செக் குடியரசு, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் போன்ற பிற முக்கிய மார்க்கெட்களின் பங்குகள் சரிந்தன; ஒவ்வொன்றும் வெறும் 2% – 4% மட்டுமே பங்களித்தன. முன்னதாக சீனாவில் கடும் கோவிட்-19 பாதிப்பினால் ஏற்பட்ட முடக்கம் காரணமாக அங்கிருந்த ஆப்பிளின் மிகப்பெரிய ஆலையில் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதே உற்பத்தி அதிகரிப்புக்கு ஆப்பிள் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு காரணமாகும். கோவிட்-19 தாக்கமே அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளை, சீனா மீதான தனது அதிகப்படியான சார்புநிலையைக் குறைக்க தூண்டியது குறிப்பிடத்தக்கது.
December 16, 2025 2:37 PM IST
2 மெகா தொழிற்சாலைகளை உருவாக்கி 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு…! ஆப்பிள் நிறுவனத்தின் புதிய திட்டம்…


