அமெரிக்காவின் டெக்சாஸ் முதல் கன்சாஸ் வரை(Texas and Kansas City) வானத்தை ஒளிரவைத்த மின்னல், உலகின் மிக நீளமான மின்னலாகப் பதிவாகியுள்ளது. 829 கிலோமீட்டர் தொலைவு ஒளிர்ந்த இந்த மின்னல், ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
2017 அக்டோபரில் நிகழ்ந்த இந்த நிகழ்வை, உலக வானிலை அமைப்பால் (WMO) தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
“மெகாஃபிளாஷ்” எனப்படும் இந்த மின்னல், முந்தைய 768 கி.மீ. சாதனையை 61 கி.மீ. வித்தியாசத்தில் முறியடித்துள்ளது. வழக்கமான மின்னல்கள் போன்று செங்குத்தாக இல்லாமல் மெகாஃபிளாஷ்கள் மேகங்களுக்குள் கிடைமட்டமாக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்திருக்கிறது.
அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராண்டி செர்வெனி கூறுகையில், “இந்த மின்னல்களின் இயக்கவியல் மற்றும் காரணங்களை இப்போதுதான் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளோம். மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் இன்னும் பெரிய மின்னல்களைக் கண்டறிய முடியும்” என்றார்.
பூமியின் மேற்பரப்பிலிருந்து 35,000 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்தில் சுற்றும் NOAAவின்(National Oceanic and Atmospheric Administration) GOES வானிலை செயற்கைக்கோளிலிருந்து பெறப்பட்ட செயற்கைக்கோள் தரவுகள் மூலம் உறுதியாகியுள்ளது.
பொதுவாக, மின்னல்கள் 16 கி.மீக்கும் குறைவாகவே பயணிக்கின்றன. ஆனால் மெகாஃபிளாஷ்கள் 100 கி.மீ.க்கு மேல் நீளமாக, மேகங்களுக்குள் கிடைமட்டமாகப் பயணித்திருக்கின்றன. அதனால் தான் ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
மின்னல்கள் தொடர்பான மேலும் சில எண் கணக்குகள்!
நீண்ட மின்னல் கால அளவு: 17.102 வினாடிகள், ஜூன் 18, 2020 அன்று உருகுவே மற்றும் அர்ஜென்டினாவில் காணப்பட்டது.
அதிக எண்ணிக்கையிலான மறைமுக இறப்புகள்: 1994 ஆம் ஆண்டில், எகிப்தின் ட்ரோங்காவில் எண்ணெய் தொட்டிகளில் மின்னல் தாக்கி 469 பேர் உயிரிழந்தனர்.
ஒரே தாக்குதலால் ஏற்பட்ட அதிகபட்ச இறப்புகள்: 1975 ஆம் ஆண்டில், ஜிம்பாப்வேயில் ஒரு குடிசையில் மின்னல் தாக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.