
கடந்த காலங்களில் மக்களைப் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக்கி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்ற அதிகார வெறி கொண்ட அரசியல் குழுவொன்றின் வழிநடத்தலிலேயே விஹாரமா தேசி பூங்காவில் நடத்தப்பட்ட சத்தியாகிரகமும் இடம்பெற்றதா என சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்றதாகக் கூறப்படும் மூடிய அறைச் சந்திப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள், இதன் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கங்கள் குறித்துப் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் 300-க்கும் மேற்பட்ட அப்பாவி உயிர்கள் பலியான சூழலில், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மக்களின் உணர்வுகள் தூண்டப்பட்ட அரசியல் போக்கை ஒத்த வகையில், தற்போதும் இவ்வாறான சந்திப்புகளும் நடவடிக்கைகளும் அரசியல் இலாபங்களைப் பெற்றுக்கொள்வதற்காகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த இரகசியக் கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள் யார், அங்கு விவாதிக்கப்பட்ட விடயங்கள் என்ன, அதன் உண்மையான நோக்கம் என்ன என்பன குறித்துப் பாதுகாப்புத் தரப்பினரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் உடனடியாக விசாரணைகளை நடத்த வேண்டும்.
இதில் சட்டமீறல்கள் இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களைக் கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைச் சட்டம் உள்ளிட்ட பொருத்தமான சட்டக் கட்டமைப்பின் கீழ் இந்நடவடிக்கைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
நாட்டு மக்களின் மதப்பற்றையும் உணர்வுகளையும் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காகப் பயன்படுத்தும் அனைத்து முயற்சிகளும் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறான ஊழல் மற்றும் சதித்திட்ட அரசியல் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு மக்கள் அதிகாரத்தை வழங்கினர்.
எனவே, ஜனாதிபதி உள்ளிட்ட பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, கிங்ஸ்பரி ஹோட்டல் சந்திப்பு தொடர்பில் முழுமையான விசாரணையை நடத்தி, உண்மையான நிலைமையை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.என்றார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான டேனியல் நோயல் ஜனஸ்தான் உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

