ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரத்தில் நள்ளிரவில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், இ-காமர்ஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இளம் டெலிவரி பாய் ஒருவர், சர்ச்சைக்குரிய பணம் தொடர்பாக, தனது முன்னாள் மேலாளருடன் கடுமையான மோதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து தன்னைத் தானே தீ வைத்து கொளுத்தி தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.
ஏப்ரல் 22 செவ்வாய்க்கிழமையன்று, இரவு 9 மணியளவில் அச்சல்வன்ஷி காலனியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஃபிளிப்கார்ட்டின் முன்னாள் டெலிவரி பாயான பிரகாஷ் மாலி, தனது மேலாளர் ஹிதேஷ் பிரஜாபத்தின் வீட்டிற்கு வந்திருக்கிறார். பராபாக் பகுதியில் வசிக்கும் பிரகாஷ் மாலி, தனது மொபைல் போனை திருப்பித் தருமாறு கோரியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். தீர்க்கப்படாத பணப் பிரச்சனையைக் காரணம் காட்டி, பிரஜாபத் அவரது மொபைல் போனை திருப்பித் தர மறுத்ததால் நிலைமை உடனடியாக மோசமடைந்தது.
ஹிதேஷின் சகோதரர் சந்திர பிரகாஷ், அந்த இளைஞரை சமாதானப்படுத்த முயற்சித்த போதிலும், மாலி வீட்டை விட்டு ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. சில நிமிடங்கள் கழித்து, மீண்டும் அங்கு வந்த பிரகாஷ் மாலி, தன்னைத்தானே பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அருகில் இருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
செய்தியாளர்களிடம் பேசிய சந்திர பிரகாஷ், அந்த துயரமான சம்பவம் குறித்து விவரித்தார். “நாங்கள் அவர் மீது மண்ணை வீசி தீயை அணைத்தோம். பின்னர் அவரை ஜவஹர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்” என்றனர். பலத்த தீக்காயங்களுக்கு ஆளான மாலி, பின்னர் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கோட்வாலி காவல் நிலைய அதிகாரிகள், ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி பிரேம்தன் ரத்தன் தலைமையில், தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். “நாங்கள் அனைத்து வாக்குமூலங்களையும் சேகரித்து உண்மைகளை சரிபார்த்து வருகிறோம். விசாரணையின் அடிப்படையில் விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் கூறினார்.
மாலி ஃபிளிப்கார்ட்டின் டெலிவரி ஏஜென்டாகப் பணியாற்றி வந்திருக்கிறார். அவர் வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து டெலிவரிக்காக ரூ.4,500 வசூலித்துவிட்டு, அந்த தொகையை நிறுவனத்தில் டெபாசிட் செய்ய தவறிவிட்டார். இதனால் மேனேஜருக்கும், அவருக்கும் மோதல் வெடித்தது. “நாங்கள் பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டபோது, அவர் பத்து நாட்களுக்கு முன்பு, திடீரென வேலையை விட்டு விலகியதுடன், எங்கள் அழைப்புகளையும் தவிர்க்கத் தொடங்கினார்” என்று மேலாளர் பிரஜாபத் கூறினார்.
April 26, 2025 10:27 PM IST
முற்றிய வாக்குவாதம்… மேலாளர் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற நபர்.. ராஜஸ்தானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

