சுங்கை பட்டாணி:
செல்லுபடியாகும் உரிமம் இன்றி கைத்துப்பாக்கி வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 37 வயது வேலைவாய்ப்பற்ற நபர், இன்று (புதன்கிழமை) இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட கோர் வெய் யே (Kor Wei Ye) என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டு , நீதிபதி நபிஷா இப்ராஹிம் முன்னிலையில் மாண்டரின் மொழியில் வாசிக்கப்பட்டபோது, அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து , விசாரணை கோரினார்.
கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி காலை 9 மணியளவில், பண்டார் லகுனா மெர்போக் (Bandar Laguna Merbok) பகுதியில் உள்ள ஒரு வீட்டில், முறையான அனுமதியின்றி ‘சிக்ஆர்ம்ஸ்’ (Sigarms) ரக வெள்ளி நிற கைத்துப்பாக்கியை வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
1971-ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் (அதிகரிக்கப்பட்ட அபராதங்கள்) பிரிவு 8-ன் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் குறைந்தது ஆறு பிரம்படிகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டதுடன், அடுத்தகட்ட விசாரணை மற்றும் ஆவணங்கள் சமர்ப்பிப்பிற்காக ஜனவரி 21-ஆம் தேதியை நிர்ணயித்தது.
அதே நேரத்தில், இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கோர் வெய் யே மீது மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றுக்கும் அவர் ‘குற்றவாளி அல்ல’ என்று பதிலளித்தார்.
சட்டவிரோதமாக 10 தோட்டாக்களை வைத்திருந்தது,மூன்று வெவ்வேறு நபர்களைக் கொலை மிரட்டல் விடுத்தது (தனித்தனி 3 வழக்குகள்) போன்ற கூடுதல் குற்றச்சாட்டுக்களும் அவருக்கு எதிராக முன் வைக்கப்பட்டது.




