Last Updated:
140 கோடி இந்தியர்களின் கனவான “ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவது” என்பது தனது வாழ்நாள் லட்சியம் என்றும் நீதா அம்பானி குறிப்பிட்டுள்ளார்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 49-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் (AGM) உரையாற்றிய ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் தலைவர் நீதா அம்பானி, கல்வி, விளையாட்டு, மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் புதிய மாபெரும் சமூகத் திட்டங்களை அறிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் தொடங்கப்பட்டு 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இதுவரை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பரந்து விரிந்து சுமார் 9.7 கோடி இந்தியர்களின் வாழ்க்கையில் இது நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் ஒரு நிறுவனத்தின் கடமையாக (CSR) தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, தற்போது “வி கேர்” (We Care) என்ற தாரக மந்திரத்துடன் நாட்டின் மிகப்பெரிய சமூக மாற்றத்திற்கான அமைப்பாக உருவெடுத்துள்ளதாக நீதா அம்பானி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
கல்வி மற்றும் மருத்துவத் துறையில் இரண்டு பிரம்மாண்ட உள்கட்டமைப்புத் திட்டங்களை ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் கையில் எடுத்துள்ளது. இந்திய உயர்கல்வித் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், சர்வதேசத் தரத்திலான ஒரு புதிய பல்கலைக்கழகத்தை நிறுவ ஃபவுண்டேஷன் திட்டமிட்டுள்ளது.
மும்பையில் அதிநவீன உலகத் தரத்திலான மருத்துவ வசதிகள் மற்றும் சிகிச்சைகளை ஒரே இடத்தில் வழங்கும் நோக்கில் ஒரு பிரம்மாண்ட ‘மெடிக்கல் சிட்டி’ உருவாக்கப்படவுள்ளது.
ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனின் ‘அனைவருக்குமான கல்வி மற்றும் விளையாட்டு’ திட்டத்தின் மூலம் இதுவரை 2.9 கோடி குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். நடப்பு ஆண்டில் மட்டும் இந்த ஃபவுண்டேஷன் மூலம் பயிற்சி பெற்ற வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் 386 தேசிய மற்றும் சர்வதேசப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
தற்போது ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா அதிகப் பதக்கங்களை வெல்லக்கூடிய வில்வித்தை, தடகளம், குத்துச்சண்டை, துப்பாக்கிச் சுடுதல், மல்யுத்தம் மற்றும் பேட்மிண்டன் ஆகிய 6 விளையாட்டுகளில் ஃபவுண்டேஷன் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் இணைந்து 3 வயது முதல் குழந்தைகளுக்கு விளையாட்டு மற்றும் ஒழுக்கப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், 140 கோடி இந்தியர்களின் கனவான “ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவது” என்பது தனது வாழ்நாள் லட்சியம் என்றும் நீதா அம்பானி குறிப்பிட்டுள்ளார்.
மும்பைக்கு உலகத் தரத்திலான ‘மெடிக்கல் சிட்டி’, 410 ஏக்கரில் புதிய பல்கலை.! நீடா அம்பானி அறிவிப்பு..


