Last Updated:
ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய விமானங்களை இழந்தது குறித்து முப்படைகளின் தளபதி அனில் சவ்ஹான் தகவல் வெளியிட்டார். காங்கிரஸ் இதை மத்திய அரசுக்கு எதிராக பயன்படுத்தி விமர்சித்தது.
ஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் கடந்த ஏப்ரல் 7, 8 மற்றும் 9ஆம் தேதிகளில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
இந்தியாவின் கச்சிதமான தாக்குதலில் பாகிஸ்தானில் இயங்கி வந்த 9 பயங்கரவாத நிலைகள் தாக்கி அழிக்கப்பட்டன. பாகிஸ்தானுக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் சில விமானங்களைச் சுட்டு வீழ்த்திவிட்டதாக பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது.
இதனையடுத்து, பாகிஸ்தானிடம் எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது என்பதை வெளிப்படையாகச் சொல்லவேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், பாதுகாப்புக் காரணங்கள் கருதி ராகுல் காந்தி கேட்ட கேள்விக்குப் பதில் தர மத்திய அரசு மறுத்துவிட்டது.
இந்தச் சூழலில் சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவ்ஹான், “ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளில் சில தவறுகள் நடந்ததால், இந்திய விமானப்படை விமானங்களை இழக்க நேரிட்டதாக” கூறினார். ஆனால், எத்தனை விமானங்களை இழந்தோம் என்ற விவரங்களை வெளியிட அனில் சவ்ஹான் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “சிங்கப்பூரில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாதுகாப்புப் படைத் தலைவர் தளபதி அனில் சவுகான் சில முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளார். பிரதமரோ அல்லது பாதுகாப்புத் துறை அமைச்சரோ அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு முதலில் தகவல் தெரிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு வெளியுறவுக் கொள்கை மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்பதை சவுகானின் தகவல்கள் வலுப்படுத்துகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
June 01, 2025 5:38 PM IST


