Last Updated:
அமெரிக்காவில் 13 வீரர்களை சுட்டுக் கொன்ற முன்னாள் ராணுவ வீரர் நிடால் ஹசனுக்கு வரும் டிசம்பர் 3-ஆம் தேதி நிறைவேற்றப்படும் மரண தண்டனை பொதுமக்கள் காண நேரலை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் முன்னாள் ராணுவ வீரருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை பொதுமக்கள் காணும் வகையில் நேரலை செய்யப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி, டெக்சாஸில் உள்ள ஃபோர்ட் ஹூட் ராணுவ முகாமில், ராணுவ மனநல மருத்துவரும் மேஜருமான நிடால் ஹசன் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயமடைந்தனர்.
ராணுவ நீதிமன்ற விசாரணையில், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் மற்றும் இஸ்லாமியர்களைப் பாதுகாக்கவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஹசன் ஒப்புக் கொண்டார். அதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி, நிடால் ஹசனுக்கு வரும் டிசம்பர் 3-ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. அமெரிக்க ராணுவத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்படும் இந்த மரண தண்டனை, துப்பாக்கிச் சூடு முறையில் நிறைவேற்றப்படுகிறது.
இந்நிலையில், நிடால் ஹசனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை பொதுமக்கள் பார்க்கும் வகையில் நேரலை செய்யப்படும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பிட் ஹெக்செத் அறிவித்துள்ளார்.
நவீன அமெரிக்க வரலாற்றில் மரண தண்டனை நேரலை செய்யப்படுவது இதுவே முதல் முறை என்றபோதிலும், சட்ட ரீதியான சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். குற்றச் செயல்களுக்கு கடுமையான தண்டனை உண்டு என்பதை உலகிற்கு உணர்த்தவே இந்த நடவடிக்கை என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

