கர்நாடாக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் மகேந்திர ரெட்டி. 31 வயதான இருவருக்கும், 28 வயதான கிருத்திகா என்பவருக்கு இடையே கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. மருத்துவர்களான இருவரும் மாரத்தஹள்ளியில் தங்கி, விக்டோரியா மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தனர். டாக்டர் தம்பதி தங்களது இல்லற வாழ்க்கையை இனிமையாக தொடங்கிய நிலையில், ஓராண்டுக்குள் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி கிருத்திகா திடீரென சுயநினைவை இழந்து மரணமடைந்தார்.
இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார், கிருத்திகாவின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவருக்கு வழங்கப்பட்ட மருந்துகள் மற்றும் ஊசிகளை கைப்பற்றி தடயவியல் அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. 6 மாதங்கள் கடந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் தடயவியல் அறிக்கை வெளிவந்தது. அதில், அதிக மயக்க மருந்து கொடுத்து கிருத்திகா கொலை செய்யப்பட்டது அம்பலமானது.
இதையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்தியதில் கிருத்திகாவின் கணவர் மைகேந்திர ரெட்டியே அவரை திட்டமிட்டு கொலை செய்தது உறுதியானது. புரோபோஃபோல் என்ற மயக்க மருந்தை கிருத்திகா உடம்பில் செலுத்தி இயற்கை மரண போன்று நாடகமாடியது தெரியவந்தது. உடனே, கடந்த 17 ஆம் தேதி அவரின் கணவரை போலீசார் கைது செய்தனர். மனைவியை கொலை செய்தது உறுதியான போதும், யாருக்காக? எதற்காக? கொலைபாதக செயல் அரங்கேற்றப்பட்டது என்பது மர்மமாகவே இருந்தது.
இதனால், மகேந்திரா பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், மகேந்திரா தனது செல்போனில் இருந்து அனுப்பிய மெசேஜ்களை ஆய்வு செய்ததில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. டாக்டர் மனைவியான கிருத்திகாவை கொலை செய்த சில வாரங்களுக்குப் பின், மருத்துவத் துறையைச் சேர்ந்த முன்னாள் காதலி உட்பட ஐந்து பெண்களுக்கு பல்வேறு மெசேஜ்கள் அனுப்பியுள்ளார். குறிப்பாக மகேந்திராவுடன் ஏற்பட்ட மன கசப்பால் சமூக வலைதளம் மூலம் அவர் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு முன்னாள் காதலி லாக் செய்துள்ளார்.
இதனால் வேறு வழியின்றி போன்-பே மூலம் “நான் உனக்காகத் தான் என் மனைவியைக் கொன்றேன்” என்று டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பியுள்ளார். ஆனால், தன்னுடன் பேசுவதற்காக மகேந்திரா நாடகம் ஆடுவதாக நினைத்த பெண், அதற்கு பதில் அளிக்காமல் இருந்துள்ளார். இதேபான்று, திருமணத்துக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை 2023 வரை மகேந்திரா காதலித்துள்ளார். திடீரென ஒருநாள் தான் விபத்தில் உயிரிழந்து விட்டதாக கூறி, தனது தந்தை மூலமாக அந்த பெண்ணுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர், கடந்த செப்டம்பர் மாதம் திடீரென்று மும்பை பெண்ணை அழைத்துள்ளார். அப்போது, தனது ஜாதகத்தில் முதல் மனைவி இறந்து விடுவார் என கூறப்பட்டிருந்தது. எனவே, உன்னை தான் நிராகரித்ததாக கூறி அளந்து விட்டுள்ளார். மேலும், உன் மீது கொண்ட காதல் உண்மை என்பதை நிரூபிப்பதற்காக தனது மனைவி இறந்த நிலையில் தற்போது உன்னையே திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார். மனைவியை கொலை செய்து விட்டு, இரண்டாவது திருமணம் செய்யும் நோக்கில் முன்னாள் காதலி உட்பட தன்னுடன் பழகிய பல பெண்களுக்கு இப்படி தூண்டில் வீசியுள்ளார்.
ஆனால், எந்த பெண்ணும் மகேந்திராவின் மாய வலையில் விழாமல் தப்பியுள்ளனர். மகேந்திர ரெட்டி அனுப்பிய மெசேஜ் மற்றும் பேசிய ரெக்கார்டு ஆதாரங்கள் போலீசாரிடம் சிக்கியதால் அப்பாவி பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். கட்டிய மனைவியை தனது மருத்துவ அறிவை பயன்படுத்தி கொலை செய்த மருத்துவர், இரண்டாவது திருமணத்துக்காக பல பெண்களை குறிவைத்து காய் நகர்த்திய சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bangalore,Karnataka
November 04, 2025 6:23 PM IST
முன்னாள் காதலிக்கு Phone Pay-வில் சென்ற அந்த மெசேஜ்.. பெண் மருத்துவர் கொலையில் கணவன் செய்த அதிர்ச்சி!

