கல்வி முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ மூசா முகமட் (வயது 81) ரத்த புற்றுநோயால் நேற்று முன்தினம் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார். மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உதவி வேந்தரான அவர் நேற்று முன்தினம் இரவு 7.21 மணியளவில் தனது இறுதி மூச்சை விட்டதாக அவரின் மகள் ஆய்ஷா நாத்தாஷா மூசா கூறினார்.
பாகான் டத்தோவைச் சேர்ந்த அவர் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை கல்வி அமைச்சராக இருந்து வந்தார். அரசியல்வாதி இல்லாத ஒருவர் நாட்டின் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றது அதுவே முதன் முறையாகும். மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைத் தவிர்த்து, அவர் பல்வேறு பதவிகளைப் பெற்று வந்திருந்தார். இதில் 2001ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை அனைத்துலக கல்வி அமைச்சர்கள் சங்கத்தின் தலைவர் பதவியும் அடங்கும்.


