தனது முன்னாள் உதவியாளருக்கு எதிரான MACC விசாரணை, மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் DAP மத்திய செயற்குழு (CEC) தேர்தலில் தனது இடத்தைப் பாதுகாப்பதற்கான வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும் என்ற சாத்தியத்தைத் தெரசா கோக் நிராகரிக்கவில்லை.
கோலாலம்பூரில் உள்ள பல பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டுகளை(interactive smart boards) வழங்குவதில் ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தனது முன்னாள் ஊழியர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பலர் தன்னிடம் அதிருப்தி அடைந்ததாகச் செபுத்தே எம்.பி. ஒப்புக்கொண்டார்.
“எனது முன்னாள் உதவியாளரை அறிந்த டிஏபி பிரதிநிதிகள் என்னை நீக்கவோ அல்லது நிராகரிக்கவோ தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தலாம் என்று நான் நினைப்பதால், கட்சித் தேர்தலில் நான் பாதிக்கப்படலாம்,” என்று டிஏபி தேர்தலில் தனக்கு எதிரான இயக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகுறித்து கேட்டபோது அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
“எனது முன்னாள் உதவியாளர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக எனக்குச் சேவை செய்தார். எனவே, கடந்த ஆண்டு எனக்குத் தெரியாமல் தவறான நடத்தையைக் கண்டறிந்த பிறகு, அவரது சேவையை நான் பணிநீக்கம் செய்து நிறுத்த முடிவு செய்தபோது பல உறுப்பினர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை”.
“எனது நாடாளுமன்ற ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது, அதன் பின்னர், பல டிஏபி செபுதே உறுப்பினர்கள் என்மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
“அவர்கள் டிஏபி உறுப்பினர்கள் மற்றும் கிளைத் தலைவர்கள் மத்தியில் எனக்கு எதிராகப் பல விமர்சனங்களைப் பரப்பியுள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.
முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது
மார்ச் 6 அன்று, டிஏபி துணைத் தலைவர், கடந்த ஆண்டு ராஜினாமா செய்வதற்கு முன்பு, தனது சேவை மையத்தில் நிதி மற்றும் தொகுதி நிதிகளை நிர்வகித்த இரண்டு முன்னாள் ஊழியர்களை எம்ஏசிசி கைது செய்ததாகத் தெரிவித்தார்.
கோக்கின் கூற்றுப்படி, MACC விசாரணை, ஸ்மார்ட் போர்டுகளை அதிக விலைக்கு வாங்கியதாகக் கூறப்படுவதுடன் தொடர்புடையது என்று அவர் நம்புகிறார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில், பிரதமர் துறையின் கீழ் உள்ள கூட்டாட்சி பிரதேச அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவு, தனது தொகுதியின் ஒதுக்கீட்டிலிருந்து 16 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டுகள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளை வாங்குவதற்கு ரிம 99,000 செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்க தன்னைத் தொடர்பு கொண்டதாக அவர் மேலும் விளக்கினார்.
இருப்பினும், இவ்வளவு பெரிய அளவிலான ஒதுக்கீட்டைத் தான் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை என்று கோக் கூறினார், மேலும் மேலும் விசாரணைகளில் விலைப்பட்டியல்களை வழங்கும் நிறுவனம் ஒரு மோசடி நிறுவனம் என்பது கண்டறியப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக எம்ஏசிசியால் கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் டிஏபி தேர்தலில் போட்டியிடுபவர் என்பது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, வரவிருக்கும் டிஏபி சிஇசி தேர்தலில் செல்வாக்கு செலுத்த எம்ஏசிசியை கோக் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இருப்பினும், எம்ஏசிசி மீது தனக்கு எந்தச் செல்வாக்கும் இல்லை என்று கோக் வலியுறுத்தினார், மேலும் கமிஷனில் ஒரு அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை என்று மறுத்தார்.
டிஏபி பிரதிநிதிகளுக்கான ஒரு சோதனை
இதற்கிடையில், இன்று தொடர்பு கொண்டபோது, கோக், தனது முன்னாள் உதவியாளரை அறிந்த கட்சி உறுப்பினர்களுக்கு, குறிப்பாகக் கோலாலம்பூரில் உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்சினையை விளக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறினார்.
“எனவே, அவர் MACC-யால் கைது செய்யப்படும் வரை, பலர் அதிர்ச்சியடைந்தனர், குறிப்பாக எனது முன்னாள் உதவியாளர் DAP தலைமைத் தேர்தலில் வேட்பாளர்களில் ஒருவர் என்பதால்”.
“எனவே, கைது செய்ய நான் உத்தரவிட்டது போல் தோன்றியது. ஆனால் அத்தகைய உத்தரவுகளைப் பிறப்பிக்க எனக்கு அதிகாரம் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும்,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், இந்தச் சம்பவம் தனக்கும் கட்சித் தேர்தலில் வாக்களிக்கவிருக்கும் டிஏபி பிரதிநிதிகளுக்கும் ஒரு சோதனையாக அமைவதாகக் கோக் கூறினார்.
“டிஏபியின் கொள்கைகள்குறித்து கட்சிப் பிரதிநிதிகளுக்கு இது ஒரு சோதனையாக நான் பார்க்கிறேன்”.
“டிஏபியின் கொள்கைகள் என்ன? டிஏபியில் சேர அவர்களை ஈர்த்தது எது? டிஏபியின் கொள்கைகள் நேர்மை, பொறுப்புக்கூறல், பொறுப்பு, நல்லாட்சி மற்றும் ஜனநாயகம் பற்றியவை”.
“எனது சேவை மையத்தில் நடந்தது நடந்தால், நான் நடவடிக்கை எடுத்து அவரது சேவையை நிறுத்தவில்லை என்றால், நான் வேறு என்ன செய்ய முடியும்?”
“எனது நாடாளுமன்ற சேவை மையம் ஊழலின் மையமாக மாறுவதை நான் விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.
மார்ச் 7 அன்று, கோலாலம்பூரில் உள்ள பல பள்ளிகளுக்கு ஊடாடும் ஸ்மார்ட் போர்டுகளை வழங்குவதில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, ஒரு எம்.பி.யின் உதவியாளர் உட்பட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதை எம்.ஏ.சி.சி உறுதிப்படுத்தியது.
இந்த வழக்கு MACC சட்டம் 2009 இன் பிரிவு 16 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
ஊடாடும் ஸ்மார்ட் போர்டுகளை வழங்குவதற்காக “Projek Mesra Rakyat” முன்முயற்சியின் கீழ் பொது நிதியில் ரிம 1.5 மில்லியனை அங்கீகரிப்பதற்காக, 30 வயதுடைய இருவரும் சுமார் ரிம 500,000 லஞ்சம் கேட்டுப் பெற்றதாகவும் அந்த அறிக்கை கூறியது.
மார்ச் 5 ஆம் தேதி புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் வாக்குமூலம் அளித்தபோது இருவரும் கைது செய்யப்பட்டு நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.