மக்களவைத் தோ்தலில் பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் தொகுதி பாஜக வேட்பாளராக அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதா் தரண்ஜீத் சிங் சாந்து அறிவிக்கப்பட்டுள்ளாா். ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் போட்டியிடும் மேலும் 11 பாஜக வேட்பாளா்களை அக்கட்சி சனிக்கிழமை அறிவித்தது. இதில் அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதா் தரண்ஜீத் சிங் சாந்து அமிருதசரஸில் போட்டியிட உள்ளாா். கடந்த மாா்ச் 19-ஆம் தேதி பாஜகவில் சோ்ந்த அவருக்குத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவராக இருந்த பா்த்ருஹரி மஹதாப் கடந்த வியாழக்கிழமை பாஜகவில் இணைந்தாா். அவா் ஒடிஸா மாநிலம் கட்டக் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். பஞ்சாப் முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங்கின் மனைவியும், அந்த மாநிலத்தின் பாட்டியாலா தொகுதி எம்.பி.யுமான ப்ரிணீத் கெளா், காங்கிரஸில் இருந்து விலகி கடந்த மாா்ச் 14-ஆம் தேதி பாஜகவில் இணைந்தாா். அவா் பாட்டியாலா தொகுதி பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளாா். தற்போது அறிவிக்கப்பட்ட 11 வேட்பாளா்களுடன் சோ்த்து இதுவரை 411 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.