காலை 7:40 மணிக்கு மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது மேற்கூரையிலிருந்து தண்ணீர், கூழாங்கற்கள் மற்றும் சரளைக் கற்களுடன் சேர்ந்து விழத் தொடங்கியதாக அந்த மாணவி கூறியுள்ளார். உடனடியாக மாணவி வெளியே நின்று கொண்டிருந்த ஆசிரியர் ஜாவேத்திடம் கூறியிருக்கிறார். ஆனால், அவரோ இதைக் கண்டுகொள்ளாமல், அந்த மாணவியை அமைதியாக இருக்குமாறு திட்டியுள்ளார். ஆனால் சற்று நேரத்திலேயே, படித்துக் கொண்டிருந்த 35 குழந்தைகள் மீது மேற்கூரை இடிந்து விழுந்தது.
இதன் பாதிப்பில் மற்றொரு அறையின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தது. இந்த துயர சம்பவம் நடந்தபோது, பள்ளியில் இருந்த இரண்டு ஆசிரியர்களும் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்ததாகவும், விபத்து நடந்த சிறிது நேரத்திற்குப் பிறகே வேறொரு மூன்று ஆசிரியர்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது.
எட்டாம் வகுப்பு வரையுள்ள இந்தப் பள்ளியில் மொத்தம் ஏழு அறைகள் உள்ளன. ஆனால், நான்கு அறைகளில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பள்ளியில் மொத்தம் 73 மாணவர்கள் உள்ளனர். வெள்ளிக்கிழமை அன்று 71 பேர் வந்திருந்தனர்.
பல நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த மழை வெள்ளிக்கிழமையும் நின்றபாடில்லை. இதன் காரணமாக, ஏழாம் வகுப்பில் 35 மாணவர்களும், இரண்டாம் வகுப்பில் 36 மாணவர்களும் அமர்ந்திருந்தனர். ஏழாம் வகுப்பு அறையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், அனைத்து மாணவர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
விரைந்தோடி வந்த கிராம மக்கள், இடிபாடுகளை அகற்றி, குழந்தைகளை வெளியே எடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் இறந்த குழந்தைகளில் இரண்டு உடன்பிறந்தவர்களும் அடங்குவர். சோட்டு லாலின் ஏழு வயது மகன் கன்ஹா மற்றும் 13 வயது மகள் மீனா ஆகியோர் இறந்தனர். ஐந்து குழந்தைகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இரண்டு பேர் மருத்துவமனையில் இறந்தனர். 27 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்களில் 9 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். விபத்துக்குப் பிறகு, கிராம மக்கள் ஜலவார்-மனோஹர்தனா சாலையில் டயர்களை எரித்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு மற்றும் இறந்தவர்களின் உறவினர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
விபத்து குறித்து விசாரணை நடத்த ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா உத்தரவிட்டுள்ளார். கவனக்குறைவாக இருந்ததற்காக மாவட்ட கல்வி அதிகாரி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தலைமை ஆசிரியர் உட்பட ஐந்து ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். கல்வித் துறையின் ஐந்து ஊழியர்கள் இரவில் இடைநீக்கம் செய்யப்பட்டனர். விபத்து குறித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அஜய் சிங் ரத்தோர் கூறுகையில், மழைக்காலங்களில் பாழடைந்த கட்டிடங்களுக்கு விடுமுறை அறிவிக்க மாவட்ட கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும், ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை என்றும் கூறினார். ஒரு மாதத்திற்கு முன்பு, அனைத்து பாழடைந்த கட்டிடங்களையும் சரிசெய்ய துறைரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரியிருந்தார். ஆனால், பள்ளி நிர்வாகம் பாழடைந்த கட்டிடங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில், கல்வித் துறை இயக்குநர் சீதாராம் ஜாட் மாவட்ட ஆட்சியரை கடுமையாக சாடியுள்ளார். மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் முன்பே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் கட்டிடத்தை பழுதுபார்த்திருக்க வேண்டும் அல்லது வேறு கட்டிடத்தில் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். தலைமை ஆசிரியரும் குழந்தைகள் பாதுகாப்பில் கவனம் செலுத்தியிருந்தால் பிஞ்சு உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
July 27, 2025 2:11 PM IST
முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் கேட்காததால் பள்ளி கூரை இடிந்து விழுந்து உயிரிழப்பா…? 8ஆம் வகுப்பு மாணவி கூறுவது என்ன…?