கோலாலம்பூர்:
மலேசியாவில் முதல்முறையாக வீடு வாங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், B40 குறைந்த வருமானப் பிரிவினரின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் 2027 தேசிய பட்ஜெட்டில் வீடமைப்புத் துறைக்கு முக்கிய அறிவிப்புகளைப் பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்டுள்ளார்.
5 லட்சம் ரிங்கிட் வரை விலை கொண்ட முதல் வீடுகளை வாங்குவோருக்கு, கடன் ஒப்பந்தங்கள் மற்றும் உரிமை மாற்றப் பத்திரங்கள்மீது 100% முழு முத்திரை வரி விலக்கு அளிக்கப்படும். இத்தொகை மதிப்பிலான வீடுகளுக்கு முதல் 5 லட்சம் ரிங்கிட்டிற்கு முழு வரி விலக்கும், மீதமுள்ள தொகைக்கு 50% வரி விலக்கும் வழங்கப்படும்.
2027 ஜனவரி 1 முதல் 2030 டிசம்பர் 31 வரை கையெழுத்தாகும் விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தங்களுக்கு (S&P) இச்சலுகை பொருந்தும் என்றும் அவர் சொன்னார்.
நாட்டில் பாதியில் கைவிடப்பட்ட வீட்டுத் திட்டங்களை 2030-க்குள் முற்றிலுமாக ஒழிக்கும் இலக்கின் கீழ், அதற்கான மீட்பு ஒப்பந்தங்களுக்கும் முழு முத்திரை வரி விலக்கு அளிக்கப்படும்.
சுயதொழில் புரிவோர் மற்றும் நிலையான வருமானம் இல்லாத 80,000 முதல் வீடு வாங்குபவர்களுக்கு உதவ, வீடமைப்பு கடன் உத்தரவாதக் கழகம் (SJKP) வாயிலாக 20 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடன் உத்தரவாதங்கள் அளிக்கப்படும்.
B40 பிரிவினருக்கான புதிய திட்டங்கள் & RM 1 பில்லியன் ஒதுக்கீடு: PRR மற்றும் ‘ருமா மெஸ்ரா ராக்யாட்’ திட்டங்களுக்குக் கிட்டத்தட்ட 1 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ் ஜோகூர் – கூலாய், நெகிரி செம்பிலான் – நீலாய், மலாக்கா – பாயா ரும்புட் , திரெங்கானு – லெம்பா பெர்தாங் ஆகிய 4 இடங்களில் புதிய திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன:
உள்நாட்டு மக்களின் சொந்த வீட்டுக்கனவை நனவாக்கவும், குறைந்த வருமானப் பிரிவினரின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டங்கள் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.



