Last Updated:
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், முதல் நாளே, மக்களவை முடங்கியது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய பிரதமர் மோடி, குளிர்காலக் கூட்டத்தொடர் என்பது ஒரு சடங்கு அல்ல, நாட்டை வளர்ச்சியின் பாதைக்கு அழைத்துச் செல்லும் முயற்சிகளுக்கு உதவும் நிகழ்வு என்றார்.
மேலும், மக்களின் பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்புவதில் எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் தோல்வி பயத்தில் இருந்து வெளியே வர வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.
மேலும் பிகார் தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கை அவர்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை காட்டுகிறது என்றும் குறிப்பாக பெண்களின் பங்களிப்பு நம்பிக்கையை தருகிறது என்றும் பிரதமர் மோடி பேசினார்.
இதனைத் தொடர்ந்து, மக்களவை காலை கூடியதும் ஒரு நாள் உலகக் கோப்பை மற்றும் உலக கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நேரமில்லா நேரத்தை ஒத்திவைத்துவிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி குறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்ததால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இருமுறை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
December 01, 2025 4:01 PM IST


