Last Updated:
68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாகவும் விராட் கோலி செயல்பட்டு இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆட்டக்காரரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைக்கு விராட் கோலி தொடர்பான பதிவுகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஓராண்டாகவே டெஸ்ட் போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. உள்ளூரில் நடந்த நியூசிலாந்து அணியுடன் தொடரை இழந்ததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு அடுத்து நடைபெற்ற ஆஸ்திரேலியா உடனான பார்டர் கவாஸ்கர் கோப்பையில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டது
ஆனால் பல்வேறு காரணங்களால் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இந்தியா இழந்ததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது. இந்த தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஆட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இருவரும் மூத்த வீரர்கள் போல் நடந்து கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பாக ரோகித் சர்மா தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து விராட் கோலி ஓய்வை அறிவிப்பார் என்று பரவலாக பேசப்பட்டது. இருப்பினும் சில நாட்கள் அமைதியாக இருந்து வந்த விராட் கோலி இன்றைக்கு ஓய்வு அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தற்போது விராட் கோலி குறித்த தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. தோனியின் தலைமையின் கீழ் தான் விராட் கோலி முதன் முறையாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். 2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தான் விராட் கோலி அறிமுகமானார். இந்த போட்டி தொடர் 2021 ஜூன் மாதம் நடை பெற்றது.
ஜமைக்காவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்திருந்தபோது களம் இறங்கிய விராட் கோலி தான் சந்தித்த 6-ஆவது பந்தை பவுண்டரிக்கு அடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.
தொடர்ந்து விளையாடிய விராட் கோலி முதல் இன்னிங்ஸில் 4 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 15 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அத்துடன் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒட்டுமொத்தமாக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 30 சதங்களுடன் 9230 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாகவும் விராட் கோலி செயல்பட்டு இருக்கிறார்.


