Last Updated:
அக்சர் படேல் 52 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் 96 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நடைபெறும் கடைசி ஒருநாள் தொடர் இது என்பதால், இங்கிலாந்து தொடரை வெற்றியுடன் முடிக்க இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது.நாக்பூர் மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக இன்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்கள் பிலிப் சால்ட் (43 ரன்) மற்றும் டக்கெட் (32 ரன்) நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஜாஸ் பட்லர் (52 ரன்) மற்றும் ஜேக்கப் பேட்டில் (51 ரன்) அரை சதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இருப்பினும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ராணா மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (15 ரன்) மற்றும் ரோகித் சர்மா (2 ரன்) விரைவில் ஆட்டமிழந்தனர்.
இதன்பின்னர் இணைந்த சுப்மன் கில் – ஷ்ரேயாஸ் இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. அதிரடியாக டி20 போட்டி போன்று ரன்கள் சேர்த்த ஷ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 2 சிக்சர் 9 பவுண்டரியுடன் 59 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த அக்சர் படேலும் சுப்மன் கில்லுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தார். இவர்கள் 4 ஆவது விக்கெட்டிற்கு 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அக்சர் படேல் 52 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் 96 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 251 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒடிசாவின் கட்டாக் நகரில் வரும் ஞாயிறு அன்று நடைபெறுகிறது.
February 06, 2025 8:40 PM IST


