Last Updated:
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் பினராயி விஜயன் பெயரில் சுயேச்சைகள் களம் காண்கின்றனர்.
கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பெயரிலேயே சுயேச்சை வேட்பாளர்கள் களமிறங்கியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், நட்சத்திர வேட்பாளர்கள் பெயரிலேயே சுயேச்சை வேட்பாளர்களைக் களமிறக்கும் உத்தி, இந்தியத் தேர்தலில் நீண்ட காலமாகத் தொடர்கிறது. குறிப்பாக, கடந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து அதே பெயரில் ஆறு பேர் சுயேச்சையாக களமிறங்கினர்.
அதேபோல, எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கேரள முதலமைச்சர் விஜயனை எதிர்த்து தர்மடம் தொகுதியில் விஜயன் என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். பேப்பூர் தொகுதியில் அமைச்சர் முகமது ரியாஸை எதிர்த்து அதே பெயரில் இருவர் களம் காண்கின்றனர்.
களமசேரியில் அமைச்சர் ராஜீவ், ராஜீவ் என்ற மற்றொரு வேட்பாளரை எதிர்கொள்கிறார். மூத்த காங்கிரஸ் தலைவர்களும் இதே பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். அதன்படி, ஹரிபாட் தொகுதியில் ரமேஷ் சென்னிதலா, வட்டியூர்காவில் முரளீதரன் உள்ளிட்டோர் அதே பெயரிலான வேட்பாளர்களை எதிர்கொள்கின்றனர்.
இதில் பாஜக வேட்பாளர்களும் தப்பவில்லை. நேமம் தொகுதியில் என்.டி.ஏ. வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர், மஞ்சேஸ்வரம் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் ஆகியோரை எதிர்த்து அதே பெயரிலான சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர்.
Mar 26, 2026 10:20 PM IST


