Last Updated:
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி – ராமநாதபுரம் இடையே தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச் சாலையாக மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், மதுரையிலிருந்து தனுஷ்கோடி வரை தற்போது உள்ள 2 வழி தேசிய நெடுஞ்சாலை எண் 87-இல், பரமக்குடியிலிருந்து ராமநாதபுரம் வரையான பகுதியை 4 வழிச் சாலையாக மாற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 1853 கோடி ரூபாய் செலவில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், பரமக்குடி, சத்திரக்குடி, அச்சுண்டவயல், ராமநாதபுரம் பகுதிகள் பயனடையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது சுற்றுலாவை மேம்படுத்துவதோடு, தடையற்ற போக்குவரத்துக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையிலான ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்படி, முதல்முறையாக பணியில் சேருவோருக்கு ரூ. 15,000 வரை மத்திய அரசு வழங்கும். மேலும், பணி வழங்கும் நிறுவனங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு சலுகை வழங்கப்படும்.
இதன்மூலம், இரண்டு ஆண்டுகளில் 3 கோடியே 50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்கும் உரிமையாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். உற்பத்தி துறைக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட சலுகைகள் வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிற வாய்ப்புகளை எளிதாக்கும் 5 திட்டங்களின் தொகுப்பின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதன் மொத்த பட்ஜெட் ரூ. 2 லட்சம் கோடி என நிர்ணயிக்கப்பட்டது. மேலும் இந்த திட்டத்தின் பயன்கள் வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 2027ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை உருவாக்கப்படும் வேலைகளுக்கு பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
இதேபோல, தேசிய விளையாட்டுக் கொள்கை 2001-க்கு மாற்றாக, புதிய விளையாட்டுக் கொள்கையை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மேலும், ஒரு லட்சம் கோடி ரூபாயில் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புத்தாக்கத் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை இசைவு தெரிவித்தது.
July 02, 2025 8:44 AM IST