Last Updated:
காங்கிரஸ் அரியணையில் அமர வேண்டுமென்றால் மக்களின் நம்பிக்கையை முதலில் பெற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் ஆடையை களைந்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டது கண்ணியமற்ற செயல் என பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லியில் கடந்த 20ஆம் தேதி சர்வதேச ஏஐ உச்சி மாநாடு நடைபெற்ற நிலையில் காங்கிரஸை சேர்ந்த சிலர் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உருவம் பொறித்த ஆடைகளுடன் அரங்குக்குள் நுழைந்தனர். பின்னர் பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கமிட்டு ஆடைகளை களைந்தது சர்ச்சையானது.
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், டெல்லியில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டில் வெளிநாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் ஆடையை களைந்து நின்றது நாட்டுக்கே அவமானம் என விமர்சித்தார்.
மேலும், “காங்கிரஸ், தனது சகாக்களுக்குப் பாராளுமன்றத்தில் பேசக்கூட வாய்ப்பு கொடுப்பதில்லை. நாடாளுமன்றம் செயல்பட அவர்கள் அனுமதிப்பதுமில்லை. இது காங்கிரசின் கூட்டணிக் கட்சிகளுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்துகிறது. அதனை அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர். டெல்லியில் அவர்கள் மேலாடை இன்றி போராடிய பிறகு, அவர்களது கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் அதிர்ச்சியடைந்து தங்களைத் தூர விலக்கிக் கொண்டுவிட்டன” என பேசியுள்ளார்.
காங்கிரஸ் அரியணையில் அமர வேண்டுமென்றால் மக்களின் நம்பிக்கையை முதலில் பெற வேண்டும் எனவும் பிரதமர் கூறினார்.
“முதலில் மக்களின் நம்பிக்கையை பெறுங்கள்” – காங்கிரஸுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் நரேந்திர மோடி

