முதலமைச்சர் அலுவலகத்தை இடம் மாற்றும் விஜய்..!! இனி முதலமைச்சரை பார்க்க இங்க தான் போகனும்..!!
தமிழ்நாட்டில் தொன்று தொட்டு முதலமைச்சர்கள் பயன்படுத்தி வந்த பாரம்பரிய முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து விஜய் வேறு இடத்திற்கு மாற இருக்கிறார். இதன் படி முதலமைச்சர் விஜய், தான் இதுவரை தான் பணியாற்றி வந்த தலைமை செயலக முதன்மை கட்டிடத்திலிருந்து, அதே வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு தனது அலுவலகத்தை மாற்ற போகிறாராம்.
காமராஜர் சாலையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தான் தலைமை செயலகம் இயங்கி வருகிறது. இங்கே முதன்மை கட்டடத்தில் முதல் தளத்தில் முதலமைச்சர் அறை மற்றும் அலுவலகம் இயங்கி வருகிறது. இதனை தான் தற்போது இடம் மாற்றம் செய்கின்றனர். நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் விஜய்-இன் அலுவலகத்தை மாற்றுவதற்கான ஆயத்த பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாமக்கல் கவிஞர் மாளிகை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்திலேயே தான் இருக்கிறது.

கடந்த 1975ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 10 அடுக்கு மாடி கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது தளத்திற்கு முதலமைச்சரின் அலுவலகம் மாற்றப்பட உள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது. இந்த தளத்தில் இருந்து கடல் அழகை கண்டு ரசிக்க முடியுமாம்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர்களிலேயே பாரம்பரிய அலுவலக கட்டடத்தில் இருந்து புதிய இடத்திற்கு அலுவலகத்தை மாற்றும் முதல் நபர் விஜய் தான். தற்போதுள்ள முதன்மை கட்டடத்தில் இட நெருக்கடி அதிகரித்துள்ளதாம். மேலும் பொதுமக்களின் வருகை அதிகரித்துள்ளதால் அதனையும் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிர்வாக வசதிக்காக எடுக்கப்பட்ட முடிவு என அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆகஸ்ட் மாத மத்தியில் முதலமைச்சர் அலுவலகம் முழுவதுமாக நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 10ஆவது தளத்தில் தற்போதுள்ள பெரிய மாநாடு கூடம் மற்றும் அதன் அருகிலுள்ள உணவக பகுதியை முதலமைச்சரின் அலுவலகமாக மாற்றும் பணிகள் பொதுப்பணித்துறையால் தொடங்கப்பட்டுள்ளது. இங்குள்ள பொருட்கள் கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றப்படுகிறதாம்.
ஏற்கனவே இந்த தளத்தில் இயங்கி வரும் தகவல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, வணிகவரித்துறையின் சில பிரிவுகள் இடமாற்றம் செய்யப்படுகின்றன. இதில் தகவல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றப்பட உள்ளது. மற்ற துறைகள் கோட்டை வளாகத்திற்குள்ளேயே வேறு இடங்களுக்கு மாற்றப்படும் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
முதலமைச்சரின் அலுவலகம் மாற்றப்பட்டாலும், பொதுமக்கள் வந்து செல்வதற்கும் அதிகாரிகள் , அமைச்சர்கள் வந்து செல்வதற்கும் நிர்வாக பணிகள் தடையில்லாமல் நடப்பதற்கும் சிக்கல் இல்லாத வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறதாம். நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் அறைக்கு என பிரத்தியேக லிஃப்ட் கொண்டு வரப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
முன்னதாக தலைமை செயலகத்தையே வேறு இடத்திற்கு மாற்ற திட்டம் இருப்பதாக சொல்லப்பட்டது. குறிப்பாக கோயம்பேடு பேருந்து நிலையத்தை தலைமை செயலகமாக மாற்ற ஆலோசனை நடப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. முதலமைச்சர் அலுவலகம் இடம் மாறுவது குறித்தும் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால் அதற்கான பணிகள் நடப்பதை தலைமை செயலக வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

