2016-இல் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டபோது, பல இந்திய இல்லத்தரசிகள் தங்களின் அஞ்சறைப் பெட்டியில் இருந்து எடுத்த சேமிப்புத் தொகைதான் பல குடும்பங்களை நிலைகுலையாமல் காப்பாற்றியது. இதுவே அவர்களின் நிதி மேலாண்மைக்குச் சாட்சி. ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் தான் வீட்டின் ‘நிதி அமைச்சர்களாக’ இருந்து வெற்றிகரமாகச் செயல்படுகிறார்கள்.
இப்படியிருக்கையில், இந்தியாவில் இரண்டே இரண்டு பெண்கள் தான் இதுவரை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். ஒன்று மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, மற்றொன்று தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மறைந்த பிரதமர் இந்திரா காந்தி 1970-71-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது நிதி அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் பதவி விலகியதைத் தொடர்ந்து, நிதித்துறையை கூடுதல் பொறுப்பாக இந்திரா காந்தி கவனித்து வந்தார். இதன் மூலம் நிதி அமைச்சகப் பொறுப்பை வகித்த முதல் பெண் மற்றும் பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் என்ற வரலாற்றைப் படைத்தார்.
அவர் தாக்கல் செய்த பட்ஜெட், வளர்ச்சியுடன் கூடிய சமூக நீதி என்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு உதவும் வகையில் பல முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெற்றன.
ஆண்டுக்கு 40,000 ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கான வருமான வரி விகிதம் உயர்த்தப்பட்டது. 2 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு அதிகபட்சமாக 93.5 சதவிகித வரி விதிக்கப்பட்டது.
முதன்முதலாக பள்ளிக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவதற்கான தேசியத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
கிராமப்புற வேலைவாய்ப்பு, வறட்சி நிவாரணம் மற்றும் குடிநீர் வசதி போன்ற சமூக நலத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
இந்திரா காந்தியின் வறுமையை ஒழிப்போம் என்ற முழக்கத்திற்கு வலுசேர்க்கும் வகையில் பட்ஜெட் அமைந்தது.
இந்த பட்ஜெட், இந்தியாவின் பொருளாதாரத்தை சமதர்மப் பாதைக்கு அழைத்துச் சென்ற மிக முக்கியமான பட்ஜெட்டாக பார்க்கப்பட்டது.
இந்திரா காந்திக்கு பிறகு, சுமார் 5 தசாப்தங்கள் கழித்து நிர்மலா சீதாராமன் இந்தியாவின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். முழு நேர முதல் பெண் நிதியமைச்சர் என்ற வரலாற்று பெருமையையும் பெற்றார்.
2019- ஆம் ஆண்டு ஜூலை 5- ஆம் தேதி, நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அன்று முதல், 6 முழுமையான பட்ஜெட்கள், 1 இடைக்கால பட்ஜெட், 1 ஜூலை பட்ஜெட் ஆகியவற்றை தாக்கல் செய்துள்ளார்.
இதன் மூலம் தொடர்ச்சியாக 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்த மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடித்தார். வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி நிர்மலா சீதாராமன் தனது 9-வது பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார்.
நிர்மலா சீதாராமன் பல சாதனைகளையும் புரிந்துள்ளார். 2019- ஆம் ஆண்டு, பாரம்பரிய சூட்கேஸ் முறையை ஒழித்து, சிவப்புத் துணியால் கட்டப்பட்ட கணக்குப் புத்தக முறையில் பட்ஜெட் காகிதங்களைக் கொண்டு வந்தார்.
2020-ஆம் ஆண்டு, வரி செலுத்துவோருக்கு இரண்டு விதமான வருமான வரி முறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வசதியை அறிமுகம் செய்தார்.
2021-இல் கொரோனா பாதிப்பு காரணமாக, காகிதமில்லா முதல் டிஜிட்டல் பட்ஜெட்டை ‘மேக் இன் இந்தியா’ டேப்லெட் மூலம் தாக்கல் செய்தார்.

