Last Updated:
இந்த புதிய விதியின்படி, முட்டை விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள், கோழி முட்டையிடும் தேதி மற்றும் அதன் காலாவதி தேதி ஆகியவற்றை இரண்டு தேதிகளை முட்டையில் எழுத வேண்டும்
உத்தரப்பிரதேசத்தில் முட்டை விற்பனை தொடர்பாக புதிய உணவு பாதுகாப்பு விதியை அறிமுகப்படுத்தியுள்ளது அம்மாநில அரசு. அதன்படி ஏப்ரல் 1, 2026 முதல் முட்டையில் அதன் காலாவதி தேதி அச்சிடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதலானது, நுகர்வோர் விழிப்புணர்வை மேம்படுத்தும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடானது உத்தரப்பிரதேசத்தில் விற்பனை செய்யப்படும் முட்டைகளுக்கு மட்டுமன்றி அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு பண்ணைகள், முட்டை மொத்த விற்பனைச் சந்தைகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் முட்டைகள் கையாளப்படும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முட்டை
இந்த புதிய விதியின்படி, முட்டை விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள், கோழி முட்டையிடும் தேதி மற்றும் அதன் காலாவதி தேதி ஆகியவற்றை இரண்டு தேதிகளை முட்டையில் எழுத வேண்டும். காலாவதி தேதியை கடந்தும் முட்டை விற்பனை தொடர்ந்தால், விதிமீறல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முட்டை ஓட்டில்தான் இந்த தேதியை குறிப்பிட வேண்டும் எனவும், அதனை பேக் செய்து எழுதக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தேதியில் மிகவும் பரவலாக உட்கொள்ளப்படும் புரதச்சத்து மிக்க உணவாக முட்டைகளே இருக்கின்றன. ஆனால் அவற்றின் விற்பனைக்கு சீரான விதிமுறைகள் எதுவும் இல்லை என்பதால் இந்த புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


