நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து 2022 ஆம் அண்டு பிப்ரவரி மாதம், உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பை தொடங்கியது ரஷ்யா. உக்ரைனும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிதி மற்றும் ஆயுத உதவிகளுடன் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனிடையே, அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரையின்போது, உக்ரைன்- ரஷ்யா பேரை 24 மணி நேரத்தில் நிறுத்தி விடுவேன் என டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று, அதிபராக பொறுப்பேற்ற பின் ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டிவரும் ட்ரம்ப், உக்ரைனுக்கு அமெரிக்கா கொடுத்து வந்த நிதியை அதிரடியாக நிறுத்தினார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்கா சென்றபோது, வெள்ளை மாளிகையில் அவருடன் கடுமையான வாக்குவாதத்திலும் ஈடுப்பட்டார். மறுபுறம், போரை நிறுத்த தீவிர முயற்சிகளையும் டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். இதற்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு தூதர்,
ஸ்டீவ் விட்காஃபை நியமித்துள்ளார். ஸ்டீவ் விட்காஃப் சவுதி அரேபியாவில், இரு நாட்டு பிரதிநிதிகளுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இதையடுத்து, ஸ்டீவ் விட்காஃப் தலைமையில் ரஷ்யா-உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தை சில மாதங்களாக நடைபெற்றுவரும் நிலையில், இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு இன்னும் சம்மதிக்கவில்லை. உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஒரு வழியாக ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்திருந்தாலும், ரஷ்யா அதற்கு ஒப்புக்கொள்ளாமல், தொடர்ந்து உக்ரைனை தாக்கி வருகிறது. ஸ்டீவ் விட்காஃப் புதினின் நிலைபாட்டிற்கு ஆதரவாக இருப்பதாக ஜெலன்ஸ்கியும் குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில், பிரான்சில் ரஷ்ய மற்றும் உக்ரைன் தலைவர்களுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இரண்டாவது கட்டமாக ஆலோசனை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. சில நாட்களுக்குள் இரு தரப்பும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால், அமைதி முயற்சியிலிருந்து அமெரிக்கா விலகிக் கொள்ளும் என மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார். இதனை அதிபர் டிரம்பும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மாதக்கணக்கில் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்பவில்லை என்றும், அடுத்த சில வாரத்திலேயே முடிவு தெரிய வேண்டும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். ஏற்கனவே, சவுதி அரேபியாவில், மார்கோ ரூபியோ மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர், ரஷ்ய அதிபர் புதினுடன் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனாலும், போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா உடன்படவில்லை. இந்நிலையில், பிரான்ஸில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, அடுத்த வாரம் லண்டனில் பேச்சுவார்த்தை நடைபெற்ற உள்ளது. அதில் மார்கோ ரூபியோ கலந்துகொள்வதாக தெரிவித்துள்ளார். அப்போதும் முடிவு எட்டப்படாவிட்டால், அமைதி முயற்சியிலிருந்து அமெரிக்கா விலகிக்கொள்ளும் என தெரிகிறது.
April 19, 2025 5:28 PM IST

