Last Updated:
நியூசிலாந்து அணியின் கட்டுக்கோப்பான பவுலிங் முன்பாக இந்திய அணி வீரர்களால் எளிதாக ரன்கள் சேர்க்க முடியவில்லை
நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் நான்காவது போட்டியில் 87 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிந்த நிலையில் மூன்றிலுமே இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்து நகரில் இன்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய டிம் சைபர்ட் 3 ரன்னிலும், பின் அல்லைன் 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அதிரடி வீரர்கள் கிளென் பிலிப்ஸ் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் அதிரடியாக ரன்கள் குவித்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினர். இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்கு 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
பிரேஸ்வெல் 25 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பிலிப்ஸ் 49 பந்துகளில் 10 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரியுடன் 107 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.
தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 4 ரன்களிலும், அபிஷேக் சர்மா 27 ரன்னிலும், இஷான் கிஷன் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 22 ரன்கள் சேர்த்தும், திலக் வர்மா 35 ரன்களும் சேர்த்தனர். நியூசிலாந்து அணியின் கட்டுக்கோப்பான பவுலிங் முன்பாக இந்திய அணி வீரர்களால் எளிதாக ரன்கள் சேர்க்க முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவுற்ற போது இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்து 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணியின் வெற்றிப் பயணத்துக்கு நியூசிலாந்து முடிவு கட்டியுள்ளது.


