Last Updated:
2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றியிருந்தது
டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து 12 வெற்றிகள் என்ற இந்திய அணியின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இந்தியா இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. இந்தியாவின் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் 20 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்தது.
எனினும் அடுத்து வந்த டேவிட் மில்லர் 63 ரன்களும், டெவால்டு ப்ரெவிஸ் 45 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 44 ரன்களும் அதிரடியாக எடுத்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 187 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணி வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. தொடர்ந்து 3 முறை ரன் ஏதும் எடுக்காத அபிஷேக் சர்மா இம்முறை 15 ரன்களில் வெளியேறினார்.
இஷான் கிஷன், ரிங்கு சிங் டக் அவுட் ஆகிய நிலையில் திலக் வர்மா ஒரு ரன்னிலும், கேப்டன் சூர்ய குமார் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஷிவம் துபே மட்டும் சற்று தாக்குப்பிடித்து 42 ரன்களை எடுத்தார். இந்திய அணி 18.5 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 76 ரன்களில் தோல்வியடைந்தது.
தென் ஆப்ரிக்காவின் யான்சன் 4 விக்கெட்களை வீழ்த்திய நிலையில், கேசவ் மகராஜ் ஒரே ஓவரில் 3 விக்கெட்களை சாய்த்தார்.


